இந்தியா

டிஜிட்டல் மீடியாவுக்கு அங்கீகாரம்

அச்சு, தொலைகாட்சி உள்ளிட்ட மரபு ரீதியான ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் அங்கீகாரங்கள், பிரத்யேக வசதிகளை டிஜிட்டல் ஊடகங்களுக்கும் வழங்கிட மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக டிஜிட்டல் மீடியா பெரியளவில் வளர்ச்சி கண்டுள்ளது. டிஜிட்டல் தளமே இனி எதிர்காலம் எனும் போது முன்னணி நிறுவனங்களிலிருந்து புதிய நிறுவனங்கள் வரை டிஜிட்டல் மீடியாவில் செயல்படுகின்றனர். இருப்பினும் அச்சு, தொலைக்காட்சி ஊடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள அங்கீகாரமும், சலுகைகளும் டிஜிட்டல் ஊடகத்தினருக்கு கிடைப்பதில்லை.

இந்நிலையில் மத்திய அரசின் புதிய அறிவிப்பு டிஜிட்டல் ஊடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. அக்டோபர் 16 அன்று இதுதொடர்பாக மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், “அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைப் போலவே டிஜிட்டல் ஊடக அமைப்புகளின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள், முதல் கட்டத் தகவல்களை பெறுவதற்கும் மற்றும் அணுகுதலைப் பெறவும் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் கூட்டத்தில் மற்றும் அது போன்ற உரையாடல்களில் பங்கேற்பதற்கான பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும்.

டிஜிட்டல் பத்திரிகையாளர்களுக்கும் அரசின் பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டை வழங்கப்படும். அதற்குரிய பலன்களும் விரிவாக்கம் செய்யப்படும். ரயில் பயண சலுகையும் அளிக்கப்படும்.

மத்திய அரசின் தகவல் தொடர்பு பணியகம் மற்றும் கள அலுவலகத்தின் வாயிலாக டிஜிட்டல் விளம்பரங்களைப் பெறுவதற்கான தகுதி டிஜிட்டல் ஊடகங்களுக்கு கிடைக்கும்.

அச்சு, மின்னணு ஊடகத்தில் இருக்கும் சுய ஒழுங்குப்படுத்தும் அமைப்புகளைப் போல, டிஜிட்டல் ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட்ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button