ஊடகங்களை மிரட்டும் பாஜக..!
தமிழக பாரதிய கட்சியின் தலைவரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனும் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது ஆறு மாதங்களில் மீடியாக்கள் அனைத்தும் பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இதனால் தான் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தரப்பட்டிருக்கிறது என்று தனது மனதில் இருப்பதை மீடியாக்கள் மத்தியில் வெளிப்படையாக கூறினார்.
அண்ணாமலையின் இந்த கருத்திற்கு உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய மீடியா உரிமையாளர்கள் அனைவரும் மௌனம் காத்து வருகின்றனர். அண்ணாமலையின் கருத்திற்கு ஊடகங்களோ, ஊடகவியலாளர்களோ ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்த பிரச்சனையை கொண்டு செல்ல முடியாது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தமிழ்நாட்டில் உள்ள பெரிய மீடியா உரிமையாளர்களும், அச்சு ஊடகங்களின் உரிமையாளார்கள், டிஜிட்டல் உரிமையாளர்கள் அனைவரும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ அனைவரும் மௌனமாக கடந்து செல்கின்றார்கள். இதற்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உடனடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை. அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதும் எதிர்பார்த்த வெற்றியை பா.ஜ.க.வால் பெற முடியவில்லை. தமிழக மக்களைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான மனநிலையில் தான் இருக்கின்றார்கள். இந்த எதிர்ப்பு மனநிலையை மாற்றினால் தான் வரும் காலங்களில் ஒரளவுக்காவது வெற்றி பெறலாம் என நினைக்கிறது பா.ஜ.க. அதற்கு தமிழகத்தில் உள்ள மீடியாக்களை, தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு சாத்தியம்.
தமிழகத்தில் ஒரு சில பெரிய ஊடக நிறுவனங்களைத் தவிர மற்ற ஊடகங்கள் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறது. நடுநிலையோடு செயல்படும் அச்சு காட்சி ஊடகங்களை மிரட்டி பாரதிய ஜனதா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் கடந்த 2019, 2021 தேர்தல்களில் பா.ஜ.கவுக்கு கிடைத்த முடிவுகளை விட 2024, 2026 தேர்தல்களில் அதிகமான இடங்களில் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் தான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
இரண்டாவது முறையாக பா.ஜ.க. 2019ல் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான மீடியாக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள மீடியாக்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் மத்திய இணை அமைச்சரை அருகில் வைத்துக் கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் மீடியாக்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாக மீடியாக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் நோக்கத்தில் பேசியிருக்கிறார். ஆனால் மீடியாக்களின் உரிமையாளர்கள் எதிர்த்து போராடாமல் மௌனமாக கடந்து செல்ல நினைக்கிறார்கள்.
இதற்கு மீடியா நிறுவனங்கள் கார்பரேட் நிறுவனங்களாக மாறியதால் தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஆட்சியாளர்கள் செயல்படும் போது எதிர்த்து போராட மனமில்லாமல் மௌனமாக இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஊடகங்கள் தவிர்த்து அரசியல் கட்சி செயல்பட முடியாது எனத் தெரிந்தும் கடந்த சில மாதங்களாக பா.ஜ.க. ஊடக விவாதகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டது. பா.ஜ.க-வை தொடர்ந்து அதிமுகவும் தற்போது ஊடக விவாதங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டது. மீடியாக்களை அச்சுறுத்தும் செயலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் மக்களின் மனநிலையை மாற்றும் நோக்கத்திற்கு பா.ஜ.க., அனைத்து ஊடக நிறுவனங்களையும் மறைமுகமாகவும், நேரடியாகவும் மிரட்டி வருவதாகவே தெரிய வருகிறது.
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதங்களில் ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது ஊடகவியலாளர்கள் தானே தவிர கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்ட ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது.
ஆட்சியாளர்களுக்கு எப்பொழுதெல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கருத்து சுதந்திரத்தை அடக்க நினைப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இதுவரை இல்லாத நெருக்கடியான நிலை இப்போது ஏற்பட்டதற்கு மீடியாக்கள் கார்பரேட் நிறுவனங்களாக மாறியது தான் உண்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.கார்பரேட் நிறுவனங்களை தன்வசப்படுத்தி நினைத்ததை சாதித்துக் கொள்ள அரசு நினைக்கிறது. அகில இந்திய அளவில் மத்திய அரசு செயல்படுத்தி வருவதைத்தான் தமிழக பா.ஜ.க. தலைவர் இங்கே வெளிபடுத்தி இருக்கிறார். அண்ணாமலையின் கருத்தை மத்திய அரசின் மனநிலையாகத்தான் பார்க்க வேண்டும்.
– சூரியன்