விலகும் பழனிச்சாமி… செக் வைக்கும் பாஜக..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதோடு பன்னீர் செல்வம் திருச்சியில் நடத்திய மாநாடு உள்ளிட்ட தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு பன்னீர்செல்வத்திற்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும் சின்ன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படங்களை சபரீசனின் குழுவினர் ஊடகங்களில் கசிய விட்டதால் பன்னீர்செல்வத்தின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக சபரீசன் மீது பாரதிய ஜனதா கட்சியினரும், எதிர்கட்சியினரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில்தான் எதற்கும் யாருக்கும் பயப்படவில்லை. நான் எப்பவும் போல்தான் இருக்கிறேன் என காட்டிக்கொள்வதற்காக பன்னீர்செல்வத்துடன் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பன்னீர்செல்வத்தை பலிகடாவாக்கியிருக்கிறார் சபரீசன் என்கிறார்கள் பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பன்னீர்செல்வம் டிடிவி தினகரனைச் சந்தித்து தமிழகத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினார். தன்னுடைய அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரனோடு தினகரன் இல்லத்திற்கு சென்ற பன்னீர்செல்வத்தை வாசலில் காத்திருந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று நட்பு பாராட்டினார் டிடிவி தினகரன். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில் சிபிஐ, சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்களோ அதேபோல் டிடிவி தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என்று கூறினார். பண்ருட்டி ராமச்சந்திரனின் பேச்சை வழிமொழிவது போல் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் ஓ.பன்னீர்செல்வம். அவரை நம்பி இருளில் கூட அவரது கையைப் பிடித்து நான் நடந்து செல்வேன். ஆனால் பழனிச்சாமியை நம்பி நடந்து செல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது போல் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல் இணைந்து செயல்படுவோம் என்றார்.
அடுத்ததாக பேசிய பன்னீர்செல்வமும் விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறினார். குறிப்பாக சேலத்தில் பன்னீர்செல்வம் நடத்த இருக்கும் மாநாடு பற்றி பேசியுள்ளனர். பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்திலேயே அவர் செய்த தவறுகள், துரோகங்கள், முறைகேடுகள் போன்ற கருத்துக்களை மக்களிடம் பேசவேண்டும். பழனிச்சாமியுடன் பயணிக்கும் முன்னாள் அமைச்சர்களின் முறைகேடுகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் பற்றி பேசிக்கொண்டதாக தினகரன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் சந்திப்பு ஏற்கனவே திட்டமிட்டதாக சொல்லப்பட்டாலும் டெல்லியிலிருந்து வந்த உத்தரவால்தான் டிடிவி தினகரன் வீட்டிற்கே சென்று பன்னீர்செல்வம் சந்தித்திருக்கிறார். ஏற்கனவே பன்னீர்செல்வம், பழனிச்சாமி இருவரும் கரம்கோர்த்து இணைந்து செயல்பட வேண்டும் என பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காததால், பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரையும் இணைக்கும் வகையில் பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படிதான் டிடிவி தினகரன் வீட்டிற்குச் சென்றார் பன்னீர்செல்வம் என்கிறார்கள் தமிழக பாஜக தலைமை நிலைய நிர்வாகிகள்.
பழனிச்சாமியை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும், பாஜகவுடன் மட்டும்தான் கூட்டணி என முன்பு இருந்த மனநிலையில் தற்போது இல்லை. அவர் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கு மட்டுமே ஒவ்வொரு நகர்வுகளையும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது. அவருடன் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் தான் நமக்கு வாக்குகள் வரும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆகையால் எந்த நேரத்திலும் பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவார். இதற்கு செக் வைக்கும் விதமாகத்தான் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா கூட்டணியை கையில் எடுத்துள்ளது பாஜக.
மேற்கூறிய மூவரும் இணைந்து செயல்படும் போது அவர்களுக்கான செல்வாக்கு கூடும். இவர்களது பிரச்சாரங்கள் பழனிச்சாமியுடன் இருப்பவர்களின் செல்வாக்கை குறைக்கும் விதமாக அமையும். பழனிச்சாமியின் பெரும்பான்மையான நேரம் இவர்களுக்கு பதில் கொடுப்பதிலேயே இருக்கும். இந்நிலையில் பழனிச்சாமியை மீண்டும் பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இது ஒரு வாய்ப்பாக அமையும். இந்த மூவரின் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
சமீபகாலமாக கொங்குமண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக டெல்லி பாஜக கருதுகிறது. தென்மாவட்டங்களில் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகிய மூவரையும் இணைந்து செயல்பட வைத்தால் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பலன் தரும் எனவும் இவர்கள் மூவரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜக. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவர்களோடு பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள், சமுதாய ரீதியில் இயங்கும் இயக்கங்கள், சிறிய கட்சிகள் என மெகா கூட்டணியை அமைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 2014ல் இதுபோன்ற கூட்டணியை அமைத்து தான் இரண்டு எம்.பி.க்களை பெற்றது பாஜக. அதனால் இந்த புதிய திட்டத்தையும் கையிலெடுத்துள்ளது டெல்லி பாஜக.
இனி சசிகலா சந்திப்பு, மாநாடுகள், சுற்றுப்பயணம் என பன்னீர் சுறுசுறுப்பாக இயங்குவார் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
– சூரியன்