முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜெ.கே.ரித்தீஸ் -ஐ அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மறைந்து எட்டு மாதங்கள் ஆனாலும் அவருடன் நெருங்கிப் பழகிய நட்பு வட்டம் இப்போதும் அவர் நம்முடன் தான் இருக்கிறார் என்று அவரின் பெருமைகளைப் பேசி அவர் மறைந்த துக்கத்தை மறைத்து தங்கள் மனதை தேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் எங்கள் ஆருயிர் அண்ணன் எங்களைப் போன்ற தம்பிமார்களை தவிக்க விட்டுச் சென்று மாதங்கள் பல கடந்தாலும் அவர் மறைவை எங்களால் நம்ப முடியவில்லை. அவரது மரணம் இயற்கையான மரணமா? என்ற சந்தேகம் அவர் இறந்த நாளன்று அங்கு துக்கம் விசாரிக்க வந்த அனைவருக்குமே இருந்தது. இவ்வாறு அவருடன் பழகிய நண்பர்கள், உறவினர்கள், அனைவருக்குமே அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். அதனால் நமது குழுவினர் இது சம்பந்தமான தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் மாறுபட்ட செய்திகள், நண்பர்களின் சந்தேகங்கள், உறவினர்களின் எண்ண ஓட்டங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் நமது குழுவினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஜெ.கே.ரித்தீஸ் உயிருடன் இருக்கும்வரை வாழும் வள்ளளாகவே வாழ்ந்தார். அவருடன் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களின் மனதை அறிய விரும்பி சிலரிடம் கருத்துக்களை கேட்டபோது, அவர் மறைவை எங்களால் தாங்க முடியவில்லை. அவர் தேர்தல் பிரச்சாரத்தில் நல்ல உடல்நலத்துடன்தான் கலந்து கொண்டார். அன்று இறக்கும் நாளன்று பாரத பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டதால் ரித்தீஸ் வீட்டில்தான் இருந்தார். இறப்பிற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வரை என்னைப் போன்ற நண்பர்களிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தார். திடீரென்று கைபேசி மூலம் அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன் சிறிது நேரம் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். பிறகு என்ன நடந்தது என்று விசாரித்தபோது தான் தெரிந்தது. ரொம்ப நாளாகவே அவர் மனக்குழப்பத்தில் யாரிடமும் சொல்ல முடியாத சில விஷயங்களை மறைத்தே வெளியில் சந்தோஷமாக இருப்பதுபோல் நடித்திருக்கிறார் என்பது போன்ற மேலும் பல தகவல்களை கூறினார்கள். அவர் இறந்த போது அவருடன் அரசு மருத்துவரும் இருந்திருக்கிறார். ரித்தீஸ் இறப்பதற்கு முன் தனது கைபேசியில் ஏதோ மெசேஜ் வந்ததாகவும் அந்த தகவலை காகிதத்தில் எழுதிக் கொடுத்து மாத்திரை வாங்கி வரச் சொன்னதாகவும் தகவல்கள்.
இறந்த பிறகு ரித்தீஸின் உறவினரும் அதிமுக பிரமுகரும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அவரது கருத்தை யாரும் கேட்காமல் அவரை சமாதானம் செய்திருக்கிறார்கள். ஒரு பிரபலமான நபர் திடீரென இறந்திருக்கிறார். அவரது இறப்பில் சந்தேகம் வரும் என்பது சாதாரண மனிதருக்கே தெரியும் போது, அரசு மருத்துவருக்கு தெரியாமல் போனது ஏன்?
மாபெரும் மனிதர் ஏழைகளின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் அதாவது தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு கொடை வள்ளலாகவே வாழ்ந்து மறைந்த ரித்தீஸ் மரணம் இயற்கையானதா? அந்த நாளில் என்ன நடந்தது. அவரது மனக்குழப்பத்திற்கு காரணம் என்ன? அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யாதது ஏன்? இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் விரிவான தகவல்கள் அடுத்த இதழில் பார்க்கலாம்..
- நமது நிருபர்