ஊதியத்தை குறைத்ததால் தொழிலாளர் தற்கொலை…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் ஷரான் பிளைவுட் என்கிற பெயரில் பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் வாசிகள், வெளிமாநிலத்தினர் என 1500 க்கும் மேற்பட்டோர் கடந்த முப்பது ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைத்ததாக கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வையும் வழங்காமல் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் போதிய வருமானமின்றி சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக பத்தாயிரத்திற்கு குறைவாகவே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் இன்றைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வால் அன்றாட குடும்பத்தை நடத்த போதிய வருமானமின்றி தொழிலாளர்கள் சிலர் தற்கொலை முயற்சிக்கு வரை சென்றுள்ளார்கள். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித்பைரா என்பவர் தான் தங்கியிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அந்த பகுதியில் விசாரித்த போது ஷரான் பிளைவுட் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக ஊதியத்தை குறைத்து வழங்குவதாலும்,ஊதிய உயர்வையும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய போதிய வருமானம் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தான் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித்பைரா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறையும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.