கடத்தப்படும் கனிமவளங்கள்… : தமிழக அரசு தடுக்குமா..?
தென்காசி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குண்டுக்கல், நான்கு வகையான ஜல்லிகள் பாறை பொடிகள் என டன் கணக்கில் ராட்சத கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு அனுதினமும் கொண்டு செல்லப்படுகிறது.
தென்காசி செங்கோட்டை புளியரை வழியாக மட்டும் நாளொன்றுக்கு 250 முதல் 300 கனரக ராட்சத வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்கின்றனர்.
கேரளா தன்னுடைய மாநிலத்திலுள்ள 80 விழுக்காடு பாறை மடைகளை சுற்றுச்சூழல் காரணமாக மூடிவிட்டு, தமிழகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக பாறைகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதற்கே இங்கு ஏஜெண்டுகள் இருக்கும் நிலையில், பாறைகளைக் கொண்டு செல்வதற்கும் ஏஜெண்டுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கு திருநெல்வேலி விருதுநகர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளும் மாதாமாதம் வண்டி ஒன்றிற்கு குறிப்பிட்ட தொகையை மாமூலாகப் பெற்றுக்கொண்டு கேரளாவிற்கு நம்முடைய கனிம வளங்களையெல்லாம் அனுப்பி வைப்பதாக கூறுகிறார்கள்.
ஆற்றுமணல் இல்லாமல் போனதால் மாற்று மணலை உபயோகப் படுத்த தயாராகி விட்டனர். ஆனால் கல்லுக்கும், ஜல்லிக்கும் மாற்றுப்பொருள் இங்கே எதுவும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அம்பாசமுத்திரம், கடையம், மாறாந்தை, அயன் கொல்லம் கொண்டான், சொக்கநாதன்புத்தூர், முக்கூடல், கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை உள்ளிட்ட இடங்களில் இயங்கும் கல் குவாரிகளில் இருந்து விடிய விடிய லோடுகளை ஏற்றும் இந்த கேரளத்து வண்டிகள் காலை 6 மணிக்குள் புளியரையை அடைந்து விடுகிறதாம்.
காவல்துறை சோதனை சாவடியை திறந்ததும் நூற்றுக்கணக்கான கனரக ராட்சத வண்டிகளில் ஆயிரக்கணக்கான டன் கற்களும் ஜல்லிகளும் கேரளாவிற்கு செல்கிறது.
முறையற்ற பாஸ், முறையற்ற எடை சீட்டு, அளவுக்கதிகமாக டன் லோடு, கணக்கற்ற வண்டிகள் என்று இவர்கள் கேரளாவிற்கு கற்களை கடத்தும் விதத்தைப் பார்த்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் கல்குவாரிகளே இல்லாத நிலை ஏற்படும்.
இதில் கூடுதல் தகவல் மாறாந்தை அருகே இருக்கும் கல்குவாரியை நேரடியாக எடுத்திருப்பது கேரளாவைச் சேர்ந்த ஒருவராம். மேலும் அயன் கொல்லம் கொண்டானில் இயங்கும் கல்குவாரியை நடத்துவது ஊட்டியை சேர்ந்த கேரளா காரர் ஒருவராம்.
நாகர்கோவில், கம்பம், செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தாவிட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் நாம் பிற மாநிலங்களிடமும், பிற நாடுகளிடமும் கல்லுக்காக கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
எனவே திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி விருதுநகர் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் இயங்கும் கல்குவாரி உரிமையாளர்களை அழைத்து கேரளாவிற்கு கல் கொடுக்கமாட்டேன் என்று வாக்குமூலம் பெறுவதோடு அவர்கள் நடத்தி வரும் குவாரியில் அளவுக்கதிகமாக எத்தனை மீட்டர் கற்களை எடுத்திருக்கிறார்கள் என்பதையும் அளவீடு செய்ய வேண்டும். சமீபத்தில் சேரன்மாதேவி சார் ஆட்சியர் ஒரு கல் குவாரியை ஆய்வு செய்து 22 கோடி ரூபாய் அபதாரம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி கேரளாவிற்கு கணிம வளங்களை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கொள்ளையர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி கேரளாவிற்கு கல், ஜல்லி கொண்டு செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
– ரமாநந்தன்