ஆகம விதிகளை மீறி ராமேஸ்வரம் கருவறைக்குள் நுழைந்த காஞ்சி சங்கராச்சாரியார்…
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் புதிய நோக்கம் இராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் உள்ள மூலவருக்கு கங்காபிசேகம் செய்ய வேண்டும் என்பது. மராட்டிய பிராமணர்கள் பரம்பரை பரம்பரையாக ஆகம விதிப்படி அங்கே பூஜை செய்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயேந்திரர் பூஜை செய்ய வேண்டும் என்று காஞ்சி மடத்திலிருந்து அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். மராட்டிய குருக்களோ தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.
இந்நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கடந்த வாரம் இராமேஸ்வரம் மடத்திலிருந்து தனுஷ்கோடி சென்று சிவபூஜை செய்து விட்டு மடத்திற்கு திரும்பியிருக்கிறார். மடத்தில் ராமநாதசாமி கோவிலில் பூஜை செய்வதற்கான ஆலோசனை நடந்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் அங்கிருந்தவர்கள் கூறுகையில்..
ராமநாதசாமி கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் குமரன் சேதுபதியுடன் இணை ஆணையர் கல்யாணி, கோயிலின் பேஸ்கர் அண்ணாதுரை, மேனேஜர் கமலக்கண்ணன் ஆகியோர் ரகசியமாக ஆலோசனை நடத்தினர். அன்றைய தினம் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓஎஸ் மணியன் திடிரென கோவிலுக்கு வருகை தந்தார். அதேநேரம் பாரதிய ஜனதா கட்சியின் எச்.ராஜா, குமரன் சேதுபதியுடன் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திரரும் அங்கே வருகை தந்தார்.
காலைநேர பூஜைக்காக ஆலயத்தின் மூலவர் அறை திரையால் மூடப்பட்டிருந்தது. திரைக்குபின் பூஜை செய்து கொண்டிருந்த விஜய ஆனந்த உதயகுமார், ஸ்ரீராம், பாஸ்கர், கணேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய மராட்டிய பிராமணர்களான குருக்கள் வெளியே நடைபெறும் சலசலப்பை பார்த்து எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அதேசமயம் காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் படிக்கட்டில் ஏறி மூலவர் அறைக்குள் நுழைய முற்பட்டிருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மராட்டிய குருக்கள் விஜய ஆனந்த் குறுக்கே படுத்து காஞ்சி மடாதிபதியை உள்ளே நுழைய விடாமல் தடுத்திருக்கிறார். எச்.ராஜாவையும், ஆடிட்டர் குருமூர்த்தியையும் மற்ற கோயில் குருக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். விஜயேந்திரர் மராட்டிய குருக்களைப் பார்த்து என்னையே தடுக்கிறேளா நான் லோககுரு அழிந்து போவீர்கள் என்று சாபமிட்டிருக்கிறார். அங்கிருந்த அமைச்சரும் சங்கராச்சாரியாரை உள்ளே விடுங்கடா என்று மிரட்டியிருக்கிறார்.
கோயிலின் அறங்காவலர் குமரன்சேதுபதி தனது உதவியாளர் மூலம் படுத்து போராட்டம் செய்த மராட்டிய குருக்கள் விஜயஆனந்தை அப்புறப்படுத்தியதும் காஞ்சி சங்கராச்சாரியார் மூலவர் அறைக்குள் நுழைந்திருக்கிறார். அங்கிருந்த 15க்கம் மேற்பட்ட மராட்டிய குருக்கள் சங்கராச்சாரியாரை சிறை பிடித்தனர். இதனால் திகைத்துப் போன காஞ்சி மடாதிபதி அடுத்த மண்டபத்திற்குள்ளும், கருவறைக்குள்ளும் கால் வைக்க பயந்து பதட்டத்துடன் மடத்திற்கே திரும்பி விட்டாராம்.
இதுகுறித்து மராட்டிய குருக்கள் கூறுகையில்.. ஏற்கனவே கருவறையில் பூஜை செய்து இருப்பதாக போலியான ஆவணங்களைக் காட்டி கோவிலின் கருவறைக்குள் நுழைய முயற்சித்துள்ளது காஞ்சி சங்கர மடம். 1929க்கு முன்பு வரை சங்கரமடமும் சங்கராச்சாரியாரும் ராமேஸ்வரத்திற்குள் வந்துபோன அடையாளங்களே இல்லை. இந்த கோவிலுக்கு கைங்கரியம் செய்யும் உரிமை ராமேஸ்வரத்தில் பிறந்து வாழ்ந்து வரும் மராட்டிய பிராமணர்களுக்கே உண்டு. என் 1867 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் கவுன்சிலின் கீழ் தீர்ப்பு கூறியுள்ளது.
கோயிலின் மரபுப்படி திருமணம் செய்து மனைவியுடன் வாழும் தீட்சை பெற்றவர்களுக்கே கருவறையில் நுழைய அனுமதி உண்டு. எனவே சங்கராச்சாரியாருக்கு அந்தத் தகுதி இல்லை. எனினும் அவர் இங்கே பூஜை செய்ய துடிப்பதற்கு காரணம் கருவறையில் சுவாமியின் இடது பக்கத்தில் இருக்கும் போகசக்தி எனும் விக்ரகம் தான். மறைவாக இருக்கும் அந்த சிலைதான் உயிர் சக்தி. ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு குழந்தை செல்வத்தை அருள்பாலிப்பதும் அதுவே. கருவறைக்குள் நுழைந்து அதை கைப்பற்ற திட்டமிடுகிறார் சங்கராச்சாரியார்.
போக சக்தி சிலை என்பது இல்லற ரகசியம் சார்ந்த வடிவில் இருப்பது. அதனால் தான் மறைவாக இருப்பதுடன் உள்ளூர் பிராமணர்களை தவிர்த்துவிட்டு சிருங்கேரி மடத்தின் மேற்பார்வையில் மராட்டிய பிராமணர்களிடம் பூஜை பொறுப்பு தரப்பட்டுள்ளது என்கிறார்கள்.
– வெ.சங்கர்