ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 76 லட்சம் மோசடி ! சின்னமனூர் ஜமீன் மிரட்டும் ஆடியோ வைரல்…

திருப்பூரில் போலி வேலைவாய்ப்பு மையம் அமைத்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை வசூல் செய்து அப்பாவிகளை ஏமாற்றிவிட்டு, உல்லாசமாக சுற்றி வரும் முன்னாள் ராணுவ வீரர் குவேந்திரனிடம், கோடிகளை இழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வெயிலுமுத்துவை தொடர்ந்து, ஏமாந்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த வகையில் 1.R .பிரேம்குமார் ஆரணி தாலுக்கா,திருவண்ணாமலை மாவட்டம், 2. R .தினேஷ் வேலூர் மாவட்டம், 3. பிரதாப் வேலூர் மாவட்டம், 4. மு . ஏழுமலை ராணிப்பேட்டை மாவட்டம், 5. ச. கேசவன் காட்பாடி தாலுக்கா,வேலூர் மாவட்டம். பட்ட படிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த ஐந்து பேரிடம், EASTERN RAILWAY துறையில் வேலை வாங்கி தருவதாக போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் குபேந்திரன், சின்னமனூரை சேர்ந்த ஜமீன் பிரபு ஆகியோரிடம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி வாங்கிய 56 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும், பணத்தை கொடுக்காமல் அழைக்கழித்து ஏமாற்றியுள்ளனர்.

மேலும் திருப்பூரை சேர்ந்த சரண்யாதேவி என்பவரிடம் ரூ 20 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதில் சரண்யாதேவியின் நிலை பரிதாபத்திற்குறியது. இவரது தந்தை பழனிவேல் என்பவர், இழந்த பணத்தை மீட்க சின்னமனூர் சென்றபோது, அங்கு தனது உயிரையே இழந்து விட்டார். கணவரை பிரிந்த சரண்யா தற்போது இழந்த பணத்தை மீட்க முடியாமல் தனது மகனையும், தாயையும் வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்த மெகா மோசடியில் நூற்றுக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் முன்னாள் ராணுவ வீரர் குவேந்திரன் தலைமையில், திருப்பூரை மையமாக கொண்டு, போலி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் அமைத்து, பட்டதாரி வாலிபர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளனர். இதனால் பணத்தை இழந்ததோடு, வட்டியும் கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடி கூலி வேலை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே குவேந்திரன், ஜமீன்பிரபுவிடமிருந்து ரூ 80 லட்சம் மதிப்பிலான நிலத்தை விலைக்கு வாங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மோகன்தாஸ் என்பவர் தற்போது சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி மனு அளித்திருக்கும் நிலையில், மோகன்தாஸை தொடர்புகொண்டு ஜமீன்பிரபு பேசிய ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் மிரட்டல் தொனியில் பேசும் ஜமீன்பிரபு, குவேந்திரனுக்கு பணத்தை நிலமாக கொடுத்துவிட்டதாகவும், பத்திரிகையில் செய்தியை வெளியிட்டால் தனக்கும் எல்லோரையும் தெரியும் என மிரட்டுகிறார். மேலும் ஜமீன் பிரபுவிடம் பணத்தை இழந்தவர்கள், சுற்றிவளைத்து வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பணத்தை பறிகொடுத்த திருவண்ணாமலையை சேர்ந்த பிரேம்குமார் கூறும்போது, ரூ 15 லட்சம் வாங்கிய குவேந்திரன் கொல்கத்தா விற்கு கூட்டிச்சென்று 2 ரூபாய்க்கு வெள்ளைப்பேப்பர் கொடுத்ததோடு சரி என வேதனை தெரிவித்தார். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்கையும், சொத்துக்களையும் போலீசார் முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.