பழனி முருகன் கோவிலில் பக்தர்களிடம் வசூல் வேட்டையாடும் கயவர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு அன்றாட தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இப்படி வந்து செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் நகராட்சி நிர்வாகமும், பழனி தேவஸ்தானமும் செய்து தரவில்லை என்று சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.
முருகனை தரிசனம் செய்ய வாகனங்களில் வரும் பக்தர்களிடம் நகராட்சிக்கு வாகன நுழைவுக்கட்டணம் என்று கூறி கார் ஒன்றுக்கு ரூபாய் 70 வசூல் செய்கிறார்கள். பிறகு வாகனத்தை நிறுத்துவதற்கு தனியார் வாகன நிறுத்துமிடத்தில் ரூபாய் 70 செலுத்தி வாகனத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அனுப்பி வைக்கிறார்கள். வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்காமல் எதற்காக வாகனங்களுக்கு நகராட்சி கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்ற காரணம் புரியாமல் தவிக்கிறார்கள் வாகனங்களில் வரும் பக்தர்கள்.
அதன்பிறகு இயற்கை உபாதைகளை போக்க தனியார் கட்டண கழிப்பறைகளைத்தான் கட்டாயம் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. 1 நபர் குளிப்பதற்கு 20 ரூபாயும், கழிப்பறையை பயன்படுத்த 10 ரூபாயும் கட்டாயம் . 30 ரூபாய் செலவு செய்தால்தான் இயற்கை உபாதைகளை முடிக்க வேண்டிய சூழல்.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 25 லட்சம் செலவில் அரசின் சார்பில் கழிப்பறை மற்றும் குளியல் அறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டும் தனியார் கட்டண கழிப்பறை உரிமையாளர்களுக்கு கிடைக்கும் பணம் நின்று விடக்கூடாது என்பதால் திறக்காமல் பல நாட்களாக மூடியே வைத்திருக்கிறார்கள் பழனி நகராட்சி நிர்வாகத்தினர். அதன்பிறகு முருகப்பெருமானுக்கு முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் ரூபாய் 30 கட்டணமாக நிர்ணயித்து வசூல் செய்கிறார்கள். முடிகாணிக்கை கவுண்டரில் 30 செலுத்தி ரசீது வாங்கிக் கொண்டு முடி எடுப்பவர்களிடம் போய் அமர்ந்தால் ரூபாய் 200 முதல் 500 வரை வசதிக்குத் தகுந்தாற்போல் பேரம் பேசி வசூலிக்கிறார்கள். பழனி அடிவாரத்தில் எல்லா இடங்களிலும் அடாவடித்தனமாக வசூல் வேட்டை நடக்கிறது. அனைத்து இடங்களிலும் குத்தகை எடுத்தவர்களும் நகராட்சியினரும் கூட்டுக்கொள்ளை அடிக்கிறார்கள் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகிறார்கள். வாகன நுழைவுக் கட்டணம் தொடங்கி அனைத்து இடங்களிலும் பக்தர்களிடம் அடாவடித்தனம் செய்து வசூல் வேட்டையாடும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தார்கள்.
நடவடிக்கை எடுப்பாரா? மாவட்ட ஆட்சியர் காத்திருப்போம்.
- முத்துப்பாண்டி