கல்குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி, பூமலூர் மற்றும் ஊத்துகுளி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 50 திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. மேலும் இத்தொழிலை நம்பி நேரடியாக ஐந்தாயிரம் குடும்பங்களும் மறைமுகமாக ஐம்பதாயிரம் குடும்பங்களும் உள்ளனர். கட்டுமாணத்துறைக்கு மூலாதாரமாக விளங்கிவரும் கல்குவாரி தொழிலில் ஈடுபடுவோர் பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு கனிமவளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகுதான் தொழில் துவங்க முடியும்.
மேலும் பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபடுவோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றி தொழில் புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கல்குவாரி தொழிலில் ஈடுபடுவோர் மீது சமூக ஆர்வலர்கள் என கூறிக்கொண்டு புகார் மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கல்குவாரிகளுக்கு சென்று உரிமையாளர்களை கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறுகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரக்ஷர் குவாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஒன்றினைந்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் சமூக ஆர்வலர்கள் என கூறிக்கொண்டு பலர் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த கல்குவாரி உரிமையாளர்கள் தாங்கள் தொழில் புரியும் இடத்திற்கு அருகே குடியிருந்துகொண்டு புகைப்படம் எடுத்து தங்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வரும் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீது ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்திருப்பதாகவும். பிரதான கல்குவாரி தொழில் தொடர்து நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.