அரசியல்

ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா? நடனம் ஆடினார்களா?: தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா பேட்டி!

வேலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சர்கார் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. படத்தை பார்க்காமல் அதை பற்றி கருத்து கூறுவது தவறாகும். சர்கார் படம் குறித்த பிரச்சினையை நான் கவனித்து வருகிறேன். சினிமாவை, சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. போராடுவது வேதனை அளிக்கக்கூடியது. தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்துக்கு தடை விதிக்க முடியாது. படம் வெளியே வந்து விட்ட பின் மீண்டும் காட்சிகளை நீக்குவது என்பது தணிக்கை குழு எதற்கு?, தணிக்கை செய்தவர்கள் தவறாக தணிக்கை செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது.
திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு படத்தை சர்ச்சைக்குள் கொண்டு சென்று படத்தை ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் அண்மை காலமாக விஜய் நடிக்கும் படங்களும் அவ்வாறு தான் வருகிறது. இனிவரும் காலங்களில் யோசித்து செய்ய வேண்டும்.
விஜயகாந்த் தலைமையில் தான் இயக்குனர் முருகதாசுக்கு திருமணம் நடந்தது. விஜய் நடித்து முருகதாஸ் இயக்கிய படத்துக்கு சர்ச்சை வந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும். தணிக்கை செய்த படத்துக்கு அ.தி.மு.க. தடை கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கே குளிர்விட்டு போன மாதிரி தான் இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.
ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் பாட்டு பாடினார்களா?, நடனம் ஆடினார்களா? அல்லது தீபாவளிக்கு வீடு, வீடாக சென்று இனிப்பு வழங்கினார்களா? என்றால் இல்லை.
டெங்கு, பன்றிக்காய்ச்சல், வேலையின்மை, குடிநீர் பிரச்சினை போன்ற அதிக அளவு மக்கள் பிரச்சினை இருக்கும்போது அதை எல்லாம் தீர்க்க வேண்டிய அமைச்சர்கள் ஒரு திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்று பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓட்டு போட்டு வெற்றிபெற செய்த மக்களுக்கு அமைச்சர்கள் நல்லது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • கோகுல்ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button