“கஜா புயலை, எதிர் கொள்வதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், தமிழக அரசு நன்றாக செயல்பட்டது,’’ என, அ.ம.மு.க., துணை பொதுச் செயலாளர் தினகரன் கூறினார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டசபை தொகுதியின், மக்கள் நல திட்டங்களை புறக்கணிக்கும் தமிழக அரசை கண்டித்து, அ.ம.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் குடியாத்தத்தில் நடந்தது.
உண்ணாவிரதத்தை முடித்து வைத்த பின், நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:
இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும், எப்போது தேர்தல் வரும் என, மக்கள் அமைதியாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அமைதி புரட்சி நடக்கும். இதை எம்.பி., தேர்தலிலேயே பார்க்கலாம். 18 தொகுதிகளுக்கும், மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு ஜன.,25 வரை உள்ளது. எனவே ஜனவரியில் தேர்தல் வராது.
கஜா புயலை, எதிர் கொள்வதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், தமிழக அரசு நன்றாக செயல்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தாலும், சரியாக செயல்பட்டல், சரியாக செயல்பட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இதனால், அதிக உயிர் சேதங்களை தடுக்க முடிந்துள்ளது. இதை பேரிடர் பாதிப்பாக அறிவித்து, தகுதி வாய்ந்த மக்களுக்கு பாகுபாடின்றி இழப்பீடு வழங்க வேண்டும்.
தற்போது, ஓ.பி.எஸ்.,-ஈ.பி.எஸ்., சேர்ந்து புதியதாக, ‘டிவி’ ஆரம்பித்துள்ளனர். அதை எப்படி ஆரம்பித்தார்கள் என, வரும் காலத்தில் விரிவாக ஆராய்ச்சி நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.