ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நெல்மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்துப் பணிகள் செய்வதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்து, குடிமராமத்துத் திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், நடப்பு நிதியாண்டில், தமிழகத்தில் உள்ள 1,829 ஏரிகளில் ரூ.499.68 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற உள்ளன. நீர்வரத்து வாய்க்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் ஆகியவற்றைப் புனரமைத்தல் பலப்படுத்துதல் மற்றும் மதகுகளை மறுகட்டுமானம் செய்தல் உள்ளிட்ட பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 224 சிறிய கண்மாய்கள் மற்றும் 988 ஊரணிகளை தூர்வாரி குடிமராமத்து பணிகள் நடைபெறவுள்ளது. இதன் ஒருபகுதியாக பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நெல்மடூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆவுடையாச்சி ஊரணி குடிமராமத்து பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் ஆகியோர் பூமிபூஜையுடன் ஆவுடையாச்சி ஊரணி குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெறும் ஒவ்வொரு கண்மாய்க்கும் தலா ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் அனைத்திலும் ஒரு மாதத்திற்குள் குடிமராமத்து பணிகள் நிறைவுபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.