தமிழகம்

தார், டீசல், பெட்ரோல் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை… : நடவடிக்கை எடுப்பார்களா..?

திருச்சி & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் டேங்கர் லாரிகளில் தார், டீசல் மற்றும் பெட்ரோலை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

இதுசம்பந்தமாக விசாரித்த போது சென்னையிலிருந்து டேங்கர் லாரிகளில் சாலைகள் அமைப்பதற்கு தேவையான தார் நிரப்பப்பட்டு சீல்வைத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு டேங்கர் லாரிகளில் வரும் தாரை ஓட்டுநர்களின் துணையோடு சீலை உடைத்து பேரல்களில் நிரப்பிக் கொண்டு வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகிறாராம் அண்ணன் தலைவர் கட்சியைச் சேர்ந்த தமிழ்மணி (எ) மணிகண்டன் என்பவர். மணச்சநல்லூர் தாலுகா வெங்கங்குடி கிராமத்தில் வசித்து வரும் தமிழ்மணி சிறுகனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பி.கே.அகரம் (பாரத் பெட்ரோல் பங்க்) அருகே தெசிய நெடுஞ்சாலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் டேங்கர் லாரிகளில் வரும் தாரை ஒரு பேரல் 4 ஆயிரம் ரூபாய்க்கு பிடித்து அப்பகுதிகளில் சாலைகள் அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடம் 6 ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறாராம்.

இதுமட்டுமின்றி இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் (BPC) ஆகிய நிறுவனங்களில் இருந்து தொழிற்சாலைகள் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு டேங்கர் லாரிகளில் டீசல் நிரப்பப்பட்டு சீல்வைத்து அனுப்பி வைக்கிறார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் டேங்கர் லாரிகளில் லாரி உரிமையாளர், ஓட்டுநர் துணையுடன் லாரிகளில் வைக்கப்பட்டுள்ள சீலை உடைத்து குறிப்பிட்ட அளவில் டீசலை எடுத்துக் கொண்டு மீண்டும் சீல் வைத்து லாரிகளை அனுப்பி வைத்து விடுகிறார்களாம். இவ்வாறு எடுக்கப்பட்ட டீசலை வெளிச்சந்தையில் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்து விடுகிறார்களாம்.

தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் காட்டுப்பகுதியில் தார் பேரல்களை குவித்து வைத்திருப்பதை பார்க்கும் போதே இந்த தொழில் நீண்ட நாட்களாக நடைபெறுகிறது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் சிறுகனூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகிறார்கள். இரவு நேரங்களில் காட்டுப்பகுதிக்குள் லாரிகள் சென்று வருவது அப்பகுதி மக்களுக்கு தெரியும்போது நெடுஞ்சாலைகளில் ரோந்துப்பணியில் இருக்கும் காவல்துறையினருக்கும், சிறுகனூர் காவல் நிலையத்திற்கும் தெரியாமல் இருக்குமா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் கண்டும் காணாமல் இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் எழுகிறது.

அரசுத்துறை நிறுவனங்களுக்கு செல்லும் டேங்கர் லாரிகளில் தார், டீசல் மற்றும் பெட்ரோலை திருடும் கும்பலை பிடித்து சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

திருச்சி மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் லால்குடி துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? காத்திருப்போம்..

நமதுநிருபர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button