தமிழகம்

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை… பலியான உயிர்…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது.

பரமக்குடி தாலுகா அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார், பாக்கியலட்சுமி தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், பரமக்குடியில் உள்ள பிரபல் தனியார் மருத்துவமனையான செல்வா க்ளினிக்கில் மருத்துவம் பார்ப்பதற்கு சரவணகுமார் அவரது மனைவி பாக்கியலட்சுமியை சேர்த்துள்ளார். அங்கு மருத்துவம் பார்த்த செல்வகுமார் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகவும், ஒருவாரம் அதற்கான மருந்து மாத்திரைகளை கொடுத்தும் சிகிச்சை அளித்துள்ளனர்.

பிறகு ஒரு வாரம் கழித்து ஆபரேஷன் செய்வதற்காக செல்வா க்ளினிகில் சரவணகுமார் தனது மனைவி பாக்கியலட்சுமியை இரவு 7.30 மணியளவில் சேர்த்துள்ளார். இரவு 9.50 மணிக்கு செல்வா க்ளினிக்கில் பணிபுரியும் கௌசல்யா என்ற செவிலியர் (நர்ஸ்) ஊசி போட்டதாகவும், ஊசி போட்ட சிறிது நேரத்தில் வயிறு, தலை வலிப்பதாக பாக்கியலட்சுமி அலறியாதகவும் சிறிது நேரத்தில் வாயில் நுரை நுரையாக வந்ததாகவும் தெரிய வருகிறது.

இதனால் பதற்றமடைந்த நர்ஸ் கௌசல்யா, மருத்துவர் செல்வாவுக்கு போன் செய்து மருத்துவமனையில் நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார். உடனடியாக சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் செல்வா, சரவணகுமாரின் மனைவி பாக்கியலட்சுமியை பரிசோதித்து மாற்று ஊசி செலுத்திருக்கிறார். ஆனால் மாற்று ஊசியை செலுத்தியும் நிலைமை சரியாகவில்லை. உடனடியாக ஒரு ஆம்புலன்ஸில் பாக்கியலட்சுமியை ஏற்றி பரமக்குடி சின்னக்கடை பகுதியில் உள்ள வெங்கடசலபதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் மருத்துவர் செல்வா.

அங்கு பாக்கியலட்சுமியை மருத்துவர் வெங்கடசலபதி பரிசோதனை செய்து முதலுதவி செய்திருக்கிறார். ஆனால் 10.20 மணிக்கு இறந்துவிட்டதாக கூறி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். முப்பது நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்த சரவணகுமாரின் மனைவிக்கு தவறான சிகிச்சையால் விலை மதிப்பற்ற உயிரை இழந்து பிணமாக அரசு மருத்துவமனையில் பிணவறையில் கிடந்துள்ளார் பாக்கியலட்சுமி.

பரமக்குடி சுற்று வட்டார பகுதி முழுவதும் கிராமங்கள் சூழ்ந்த பகுதி. இங்கு பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் பரமக்குடிக்குத்தான் வர வேண்டும். அவ்வாறு மருத்துவம் பார்க்க வரும் கிராம மக்கள் மருத்துவர்களை கடவுளாக நினைப்பது வழக்கமான ஒன்று. தன்னை நம்பி வரும் கிராமவாசிகளிடம் பணிவாகப் பேசி உரிய சிகிச்சை அளிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சில மருத்துவமனைகளில் சரவணகுமாரின் மனைவி பாக்கியலட்சுமிக்கு ஏற்படது போல் பல மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறூகிறார்கள் அப்பகுதி மக்கள். செல்வா க்ளினிக்கில் மருத்துவர் செல்வகுமாரின் தவறான சிகிச்சையால் தான் பாக்கியலட்சுமி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீயாக அப்பகுதியில் பரவியதால் பரபரப்பானது பரமக்குடி அரசு மருத்துவமனை வளாகம். இதனால் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்களை சமாதனப்படுத்தி இருக்கிறார் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்.

பரமக்குடி நகரில் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் மரணங்களை தடுக்க தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஒவ்வொரு தனியார் மருத்துவமனையையும் ஆய்வு செய்து தவறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டணை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

வெ.சங்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button