அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தி பேசி வருகிறார்கள் என ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் பேட்டி அளிக்கையில், “ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அழைத்து சென்றால், இந்திய டாக்டர்களை குறைவாக பேசுவார்கள் என்றுகூறி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுத்து விட்டார். அதனால் ராதாகிருஷ்ணனை காவலில் எடுத்து, அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவிடமும் இதுபற்றி விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என்று கருதி, தமிழக காவல்துறையும் தனியாக விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்களை காவல் துறை கைது செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் கூறியபடி விசாரணை நடத்தினால்தான் ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை தெரியவரும் என்று கூறி இருந்தார். இது ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர்கள் கூறுவதைதான் ஐஏஎஸ் அதிகாரிகள் செய்யும் நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பினர்.
இந்தநிலையில் கடந்த 2ம் தேதி தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு தலைவர் சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அமைச்சர்கள் ஜெயலலிதா சிகிச்சைக்கு சுகாதாரத்துறை செயலாளரை காரணம் காட்டி பேசுவது எந்தவிதத்தில் நியாயமானது. ஜெயலலிதாவுக்கான மருத்துவ சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்து, ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்கு நிர்வாகம் செய்தவர்கள் மீது எப்படி காரணம் சொல்ல முடியும். அமைச்சர்கள் சொல்வதை தான் ஐஏஎஸ் அதிகாரிகள் செய்கின்றனர். ஆனால் விசாரணை என்று வரும்போது அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு அதிகாரிகளை குறை சொல்வது ஆச்சரியமாக உள்ளது.ஐஏஎஸ் அதிகாரிகள் அரசிற்காக சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பொது இடங்களில் கருத்து தெரிவிக்க அனுமதியில்லை, ஆனால் அரசிற்கு சேவை செய்து வரும் அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர்கள் பொது இடங்களில் புகார் கூறுகின்றனர்.
இது அரசு விதிகளுக்கு ஏற்புடையது அல்ல. எனவே தேவையில்லாமல் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது அமைச்சர்கள் கூறிவரும் குற்றச்சாட்டை, இந்த கூட்டமைப்பு தீவிரமாக பார்க்கிறது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தலையிட்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான நல்லொழுக்கத்தை காத்திட முறையிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அப்போது அவர்கள் முதல்வரிடம் கூறியதாவது: ஐஏஎஸ் அதிகாரிகள் மீது பழி சுமத்தும் வகையில் பேசும் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இவர்களது பேச்சு ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எங்களது கடமையை செய்ய முதல்வர் உரிய பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது, ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இவர்களது பேச்சு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் தலையிட்டு எங்களது பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமைச்சர்கள் – ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குங்கள்.இவ்வாறு அவர்கள் கூறியதாக தெரிகிறது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.