குற்றாலம் காதி சர்வோதயா சங்கத்தில் ரூ.1 கோடி மோசடி புகார்..!
தென்காசி அருகே, குற்றாலம் கிளை காதி சர்வோதயா சங்க மேலாளராகப் பணியாற்றியவர் சிவவடிவேலன். சங்கரன்கோவில் காதி சர்வோதயா சங்க செயலாளராகப் பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து காதித் துறைக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக, அன்னதானத் திட்டத்திற்குப் பொருட்கள் வழங்கியதாகவும், அரசுத்துறை நிறுவனங்களுக்கு பர்னிச்சர்களை பர்சேஸ் செய்து கொடுத்ததாகவும் போலி பில்கள் தயாரித்து பணம் கையாடல் செய்ததாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கண்டன போஸ்டர்கள் ஒட்டி கவனம் ஈர்த்த தென்காசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில், “குற்றாலம் காதி சர்வோதயா சங்க கிளை மேலாளராக 2019-2024 வரை சிவவடிவேலன் பணியாற்றினார். இவர், குற்றாலம் குற்றாலநாதர் சாமி கோயிலில் அன்னதான திட்டத்திற்கு மளிகை பொருள்கள் வழங்கியதாக ரூ.20 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பிற அரசுத்துறைகளுக்கு பர்னிச்சர் மெட்டீரியல்கள் குற்றாலம் காதி கிளையிலிருந்து விற்பனை செய்ததாகப் பொய் கணக்கு காண்பித்துள்ளார்.
இதுதவிர, காதி சங்கத்தில் உற்பத்தி இல்லாத பொருட்களை வெளிமார்க்கெட்டில் பர்ச்சேஸ் செய்துகொடுத்தாக ரூ.60 லட்சத்துக்குப் போலியாகக் கணக்கெழுதியுள்ளார். இதற்கான பில்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லை. அனைத்து கடன் பில்களும் மேனுவலாக தரப்பட்டுள்ளது. கிரெடிட் பில்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் கையொப்பம் இல்லை.
விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கு, கலெக்டர் அலுவலகத்திலிருந்து கொடுக்கப்பட்ட செட்டில்மெண்ட் தொகைகள் ‘செக்’ பணப் பரிவர்த்தனையாக அல்லாமல் ரொக்கமாக வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கான கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. எல்லாம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. பணப் பரிவர்த்தனை, சங்கத்தின் பெயரில் அல்லாமல், சிவவடிவேல் பெயரிலும், தனியார் நிறுவனத்தின் பெயரிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குற்றாலம் கிளை சங்கத்தில், ‘செக்’ மற்றும் ரொக்கமாகப் பணப் பரிவர்த்தனைகள் கையாளப்பட்டதில் அவரின் தம்பி ராதாகிருஷ்ணனுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. குற்றாலம் காதிக் கிளையில் மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்குப் பணமோசடிகள் நடந்திருக்கிறது. இதுகுறித்த சர்ச்சையின் பேரில் கிளை சங்கத்தின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்ய சங்கரன்கோவில் காதி சர்வோதயா சங்கத்தின் தற்போதைய செயலாளர் சிவக்குமார், விசாரணைக் குழு அமைத்தார். இந்த ஆய்வில், குற்றாலம் கிளையில் பணமுறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, துறைரீதியான மேல் நடவடிக்கை எடுப்பதற்கும், அரசுத்துறைக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்ட சிவவடிவேல் மற்றும் ராதாகிருஷ்ணன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் விசாரணைக்குழு பரிந்துரை அனுப்பியது. ஆனால், இந்து பரிவார அமைப்புகளின் பின்புலத்தைப் பயன்படுத்தி இருவரும் தண்டனையிலிருந்து தப்பித்து வருகின்றனர். பெயருக்காக அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றம் புரிந்த இருவரும் எங்கே பணி செய்தாலும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடத்தான் செய்வார்கள். எனவே, சிவவடிவேல், ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள்.
பணமுறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சங்கரன்கோவில் காதி சர்வோதயா சங்க செயலாளர் சிவக்குமார் தெரிவிக்கையில், “குற்றாலம் காதி சர்வோதயா கிளையில் இருப்பு உள்ள பொருட்களுக்கும், விற்பனை செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட பொருட்களுக்கும் வித்தியாசம் இருந்தது. இது தொடர்ந்து, விசாரணைக் குழு அமைத்து கிளையில் ஆய்வு நடத்தினோம். இந்த ஆய்வில் ‘ஸ்டாக்’ பொருள்களில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கணக்கு வழக்குகள் மற்றும் விற்பனை, வரவு-செலவு பதிவேடுகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்ததில் பல லட்சக்கணக்கான ரூபாய்க்குப் பணமோசடி நடந்திருப்பது தெரியவந்தது. எனவே சிவவடிவேலன் மற்றும் ராதாகிருஷ்ணன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை அனுப்பப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என எங்களுக்கு அழுத்தம் தரப்பட்டது. இதனால் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை.
வேறுவழியின்றி அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். செய்த தவறுக்கு, அவர்களைப் பதவியிறக்கம் செய்து பணி மாற்றம் மட்டும் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டோம். அதன்படி, டீ-புரோமோஷன் செய்து சிவவடிவேல் சுரண்டை கிளையிலும், ராதாகிருஷ்ணன் பாவூர்சத்திரம் கிளையிலும் உதவியாளராகப் பணி மாற்றம் வழங்கப்பட்டது. தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரும் சட்டத்தின்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது விரக்தியைத்தான் தருகிறது என்றனர்.