மதுக்கடைக்கு எதிராக நெடுஞ்சாலையை மாற்றக்கோரி புகார் அளித்ததால் பரபரப்பு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக வட்டாட்சியர் அலுவகத்தில் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி, கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
இந்நிலையில் நெடுஞ்சாலையில் பேருந்து நிலையத்திற்கு எதிராக டாஸ்மாக் கடை சில அடி தூரத்தில் உள்ளதால் வெளியூர் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் வாசிகளும் தங்களது உழைப்பை கொட்டி மதுவெனும் அரக்கனிடம் சிக்கி போதை தலைக்கேறி சாலையில் தள்ளாடிய படி செல்கின்றனர். இதனால் சக பயணிகளும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும்.செட்டிபாளையம் பிரிவில் டாஸ்மாக் கடை, காளிவேலம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் தனியார் பார் படுகவர்ச்சியான விளம்பரத்துடன் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறுவதாலும் பெண்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெறுத்துப்போன அண்ணாதுரை மனம் தளராமல் வினோதமான முறையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் நெடுஞ்சாலையில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாகவும் தற்போது புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளதாகவும், பல முறை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை துணை தாசில்தார் பானுமதி பெற்றுக்கொண்டார்.
மதுவை ஒழிக்க போராடி ஓய்ந்த சமூக ஆர்வலர்கள் நூதன முறையில் சாலையை மாற்றக்கோரி மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.