காதல் மனைவியை தீ வைத்து எரித்த ஆட்டோ ஓட்டுநர் ! திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காளம்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிபத்து தற்போது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் தாத்தாராம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் லட்சுமி என்கிற பெண் பிறந்துள்ளார். பின்னர் இரண்டாவதாக தாத்தாராம் ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது மனைவிக்கும் முதல் மனைவிக்குப் பிறந்த லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படவே , கடந்த 2019 ஆம் ஆண்டு லெட்சுமி தனது தோழிகளுடன் திருப்பூருக்கு குடிபெயர்ந்து , ஆத்துப்பாளையம் அருகே உள்ள பாரதி நகரில் தங்கி இருந்து அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் வேலை முடிய நேரமானதால் கவுதம் என்பவரது ஆட்டோவில் அடிக்கடி பயணித்துள்ளார். அப்போது லட்சுமிக்கும் கவுதமிற்க்கும் பழக்கம் ஏற்பட்டதால் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு காளம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே லட்சுமி கர்ப்பமான நிலையில் கவுதமிற்க்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் இருந்த லட்சுமி உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் தொண்டு நிறுவனம் லட்சுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி செய்து கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காப்பகத்தை ஆய்வு செய்ய வந்திருந்த பெண்கள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் லட்சுமி தன் மீது கணவர் கவுதம் தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து விசாரணை செய்த அதிகாரிகள் லட்சுமியை காவல்துறையில் புகார் அளிக்க பரிந்துரைத்தனர். இதனை அடுத்து காதலித்து திருமணம் செய்த கவுதம் தன்னிடம் தகராறு செய்ததோடு தன் மீது தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார்.
லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கவுதமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காதல் திருமணம் செய்த கணவர் தன்னை தீவைத்து கொலை செய்ய முயன்றதாக மனனைவியே புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.