தமிழகம்

கேரள வெள்ளம்… காரணம் என்ன..?

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவிற்கு தமிழகம்தான் காரணம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள புகார் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கேரளாவை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலிருந்து தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டி கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

அந்த கடிதத்தில்.. அத்தனை அழிவிற்குப் பின்னரும் உங்களுக்கு அந்த சின்னஞ்சிறு முல்லைப் பெரியாருதான் உறுத்துகிறது என்றால் உங்கள் மீது இரக்கம் கொண்டது தவறுதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இரண்டு லட்சம் கனஅடி நீரை வெளியேற்றி ஆலுவாவையும், எர்ணாகுளம், கொச்சியையும் வெள்ளக்காடாக்கிய இடுக்கி அணை மீது வராத கோபம் வெறும் இருபதாயிரம் கன அடி நீரை மட்டும் வெளியேற்றும் முல்லைப் பெரியாறு அணை மீது வருகிறது என்றால் உங்கள் மீது நாங்கள் எப்படி இரக்கம் கொள்ள முடியும். பம்பை ஆற்றையும், அச்சன்கோவில் ஆற்றையும் இணைத்து அதை தமிழ்நாட்டின் வைப்பாரோடு இணைப்போம் என்று நாங்கள் ஒரு நூற்றாண்டாக கத்திக் கொண்டிருக்கிறோம். அதுஉங்கள் செவிகளில் ஏறி இருந்தால் பம்பை இன்று வெள்ளக்காடாக மாறியிருக்காது. மொத்தத் தண்ணீரையும் வைப்பாற்றில் ஓடவிட்டிருந்தால் காய்ந்து கிடக்கும் எங்கள் விருதுநகர் மாவட்டம் செழுமையடைந்திருக்கும்.

செண்பக வள்ளியம்மன் கோவில் அணைக்கட்டை உடைத்தெறிந்த உங்களையே திரும்பக் கட்டித் தாருங்கள் என்று கதறி அணை கட்டுவதற்காக 1967ஆம் ஆண்டு நாங்கள் கொடுத்த நிதி ஐந்து லட்சம். அதை கட்டி முடித்து எங்களுக்கான தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொடுத்திருந்தீர்கள் என்றால் இன்று உபரிகிரி அணையும், பிலிச்சிங் அணையும் இத்தனை வேகமாக நிரம்பியிருக்காது. நாங்கள் எங்கள் பொறியாளர்கள் மூலம் கொடுத்த ஐந்து லட்சத்தை இருபது ஆண்டுகள் கழித்து எங்களுக்கே அனுப்பினீர்கள்.

நெடுங்கண்டம் அருகே இன்று பெருக்கெடுத்து ஓடும் கல்லாறு தண்ணீரை மதுரை பக்கம் குடிப்பதற்கு தாருங்கள் என்று எம்ஜிஆர் மதுரை மேயர் பட்டுராஜனும் உங்களைத் தேடி வந்து கெஞ்சிக் கேட்டார்கள். அன்றைக்கு முதல்வராக இருந்த அச்சுதமேனனுக்கோ, கருணாகரனுக்கோ அவர்களின் கதறல் கேட்டிருந்தால் இன்று கல்லாறில் பெருகி ஓடும் நீரில் பெருமளவை மதுரை உள்வாங்கி இருக்கும். இன்று மூணாறையே மூழ்கடித்து ஓடும் குட்டி ஆறையும், கண்ணி ஆற்றையும், நல்ல தண்ணி ஆறையும் மூணாறு நகரிலிருந்து பெரிய பாறை, நயமக்காடு, தலைஆறு, லக்கம், சட்டமூணாறு, பல்லக்காடு வழியாக மறையூர்க்காடு வந்து அங்கிருந்து கிழக்கு மேற்காக நீண்டு கிடக்கும் பள்ளத்தாக்கில் ஓடச்செய்து அமராவதியோடு இணைத்திருக்க ஆயிரம் வாய்ப்புகள் கிடைத்தும் அதை நிராகரித்தீர்கள்.

மாறாக வம்படியாக இந்த மூன்று ஆறுகளையும், மின்சாரத்தைத் தவிர எதற்கும் பயனில்லாத அணை இரங்கல் அணையோடு நீங்கள் சேர்த்துவிட்ட காரணத்தால் இன்று மூணாறு நிரம்பி வழிகிறது. அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது மண்வெட்டி கடப்பாறையோடு சில நபர்களை அழைத்துக் கொண்டு செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணையை உடைக்க தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்.

அச்சன்கோவில் ஆறுக்குச் செல்ல வேண்டிய நீரை மறித்து தமிழகம் அணை கட்டியதாக கூறினார். வயிற்றுப் பிழைப்புக்காக நாங்கள் வயலில் இருந்ததால் அச்சுதானந்தன் திரும்பிப் போனார். இல்லாவிட்டால் கதை மாறியிருக்கும். நீலகிரியை 1956ல் ஜவகர்லால் நேருவிடம் எழுதிக் கேட்ட நீங்கள் அது கிடைக்காமல் போனதால் இன்று மாயாற்று நீரை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். பரம்பிக்குளம் ஆழி ஆற்றில் பிரச்சனை, நெய்யாற்றின் கரை இடது வாய்க்கால் பிரச்சனை, அட்டப்பாடி முக்காலியில் பவானியை முன்வைத்து பிரச்சனை, பில்லூர் அணை பிரச்சனை இப்படியாக உங்கள் நீர்த் துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

தமிழர்கள் ஆதிகாலத்தில் வகுத்துத் தந்த நீர்மேலாண்மை என்னும் தத்துவத்தை மலையாள சகோதரர்கள் இனியாவது உணர வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். இன்று கேரளாவில் நடந்து கொண்டிருக்கும் நிலைமையை பார்க்கும்போது அன்று தேனியிலிருந்து இன்று கேரளாவில் முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் அரசுக்கு எழுதிய கடிதம் தான் நினைவுக்கு வருகிறது. இனியாவது தமிழர்களின் குரலுக்கு செவிசாய்க்குமா கேரளஅரசு?

– சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button