தமிழகம்

ஜிஎஸ்டி குறித்து ஹோட்டல் உரிமையாளரின் புகார்..! : வைரலான காணொளி.. விளக்கமளித்த நிர்மலா சீதாராமன்…

பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் கோவை தொழில்துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் அமைப்பினர், ஜிஎஸ்டி மற்றும் தொழில் பிரச்னைகள் தொடர்பாக அமைச்சரிடம் மனுக்களை அளித்தனர்.

அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசும் போது, “உங்கள் அருகில் உள்ள எம்எல்ஏ வானதி எங்களின் ரெகுலர் கஸ்டமர். வரும்போது எல்லாம் சண்டை போடுகிறார்.

காரணம் இனிப்பு வகை உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயித்துள்ளீர்கள். கார வகை உணவுகளுக்கு 12 % ஜிஎஸ்டி நிர்ணயித்துள்ளீர்கள். பேக்கரி உணவுகளில் பன், ரொட்டி தவிர மற்ற உணவுகளுக்கு 28% ஜிஎஸ்டி உள்ளது.

ஒரே பில்லில், ஒரு குடும்பத்துக்கு வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதற்கு கஷ்டமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜிஎஸ்டி ஆகிவிடுகிறது.

அதனால் வாடிக்கையாளர்கள், ‘நீ கிரீமையும், ஜாமையும் கொண்டு வா.. நானே வைச்சுக்கிறேன்.’ என்று சொல்கின்றனர். கடை நடத்த முடியவில்லை. அதனால எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்துங்கள்.” என்று அவர் பேசும்போது மொத்த அரங்கமும் சிரித்தது.

அவர் தொடர்ந்து பேசுகையில், “எம்எல்ஏ தான் இதையெல்லாம் செய்கிறார். அவர் எங்கள் தொகுதியில் உள்ளார். வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜிஎஸ்டியும் நிர்ணயித்துள்ளதாக கூறுகிறார்.

தமிழகத்தில் ஸ்வீட், காரம், காப்பி என்ற அடிப்படையில் தான் விற்பனையாகும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஹோட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள்.

ஹோட்டல்களில் தங்குவதற்கு கூட்டம் அதிகம் இருக்கும் போதும், கூட்டம் குறைவாக இருக்கும்போதும் ஒரே வரி தொகை நிர்ணயிக்கப்படுகிறது. சீசன் காலகட்டத்தில் தொகை அதிகமாக இருக்கும். மற்ற நாள்களில் அந்த தொகை இருக்காது. அதற்கு இந்த முறையில் வரி நிர்ணயிப்பது நியாயம் இல்லை. எனவே, எங்களின் கோரிக்கையை பரிசீலினை செய்யுங்கள்.” என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “நாங்கள் மாநிலம் வாரியாக எல்லாம் வரி நிர்ணயிக்கவில்லை. ஜிஎஸ்டி மற்றும் தொழில் துறை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அப்போது அவர், “ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாகப் பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதை ஜி.எஸ்.டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.

எங்கள் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும், மாநிலங்களிலிருந்தும் அந்தக் குழுவில் உள்ளனர். அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.எஸ்.டி-யை பரம விரோதியாகப் பார்ப்பவர்களுக்கு இது ஆதாயமாக இருக்கும்.

ஊறுகாய் மாமியை இப்படி எல்லாம் கேட்டுவிட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள் என்று சொல்லலாம். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. ஜி.எஸ்.டி வரியை மக்களுக்கு எந்த சுமையும் இல்லாமல், எளிமையாகக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில்தான் இறங்கியுள்ளோம்.

ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசுக்கு வருவாய் அதிகமாய் உள்ளது, தமிழகத்துக்குக் குறைவாய் கொடுக்கிறோம் என்பது தவறு. மத்திய அரசு மீது தமிழ்நாடு அரசு சார்பாக யார் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். காரணம் அரசாங்கத்திலிருந்து கொண்டே புரியாமல் பேசுவது பயமாய் இருக்கிறது.

வசூலிக்கும் வரியில் 50 சதவிகிதம் மத்திய அரசுக்கும், 50 சதவிகிதம் மாநில அரசுக்கும் செல்கிறது. எங்களுக்கு வரும் 50இல் 41 சதவிகிதமும் மாநில அரசுக்குத்தான் செல்கிறது.

100 ரூபாயில், 72 ரூபாய் மாநில அரசுக்குத்தான் செல்கிறது. எங்களுக்கு 31 ரூபாய்தான் மிஞ்சும். பைனான்ஸ் கமிஷன்தான் மாநிலங்களுக்கான நிதியை நிர்ணயம் செய்கிறது. அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை நாங்கள் ஒதுக்குகிறோம். இதில் எனக்கு அதிகாரம் இல்லை.

எனவே நிதி குறைவாக இருக்கிறது என நினைத்தால், பைனான்ஸ் கமிஷனிடம்தான் சொல்ல வேண்டும். இப்படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் அவர்களின் பங்கைக் கேட்டால் என்னாவது?” என்று கேள்வி எழுப்பினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button