பல்லடத்தில் நாட்டுப்புற கலைஞருக்கு கும்மியாட்டத்துடன் நினைவஞ்சலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். கடந்த 50 ஆண்டுகளாக கொங்கு நாட்டின் பாரம்பரிய நாட்டுக்கலையான வள்ளி கும்மி ஆட்டத்தை ஆயிரக்கணக்கானக்கானோருக்கு பயிற்றுவித்து வந்துள்ளார். இதன் மூலம் சுமார் 400 ஆசிரியர்களை உருவாக்கியுள்ளார். வள்ளி முருகக் கடவுளின் திருமணத்தை கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் கும்மியாட்டத்தின் வாயிலாக மக்களிடையே கொண்டு சென்றனர்.
கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த வள்ளிக்கும்மியாட்டத்தை பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சுப்பிரமணியம் கற்றுக்கொடுத்துவந்தார். ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கற்றுவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி சுப்பிரமணியம் காலமானார். அவர் இறந்து ஓராண்டு ஆன நிலையில் தங்களது ஆசான் சுப்பிரமணியத்திற்க்கு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பணிக்கம்பட்டியில் நடைபெற்றது.
முன்னதாக ஆசான் சுப்பிரமணியத்தின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெண்கள் குழந்தைகள் மற்றும் ஆண்கள் வள்ளி கும்மியாட்டம் ஆடி தங்களது ஆசான் சுப்பிரமணியத்திற்கு மரியாதை செலுத்தினர்.