நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அமமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கலந்துக்கொண்டார்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க சேத்தியாத்தோப்பு முதல் கம்மாபுரம் வரை 40 கிராமங்களில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் இந்த முடிவிற்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரும் அவர்களுக்கு ஆதவராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமமுக சார்பில் கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் பேசியதாவது. “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் மக்களைப் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி அளித்திருக்க மாட்டார். என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தும் எண்ணம் வந்து இருக்காது. ஜெயலலிதா ஆட்சி நடைப்பெறுவதாக கூறும் இவர்கள் விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் காட்டாச்சி நடந்து வருகிறது. இது இருண்ட ஆட்சி, தமிழக மக்கள் ஒட்டு மொத்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மத்திய அரசு தினம், தினம் ஒரு குண்டை தூக்கிப் போட்டு வருகிறது. இது விவசாயிகளுக்குச் சோதனை காலம் என்றே கூற வேண்டும். தமிழக விவசாயிகள் தினம் காலையில் எழுந்திருக்கும் போதே இன்றைக்கு என்ன திட்டம் பாதிக்கும் வகையில் வரப்போகிறதோ என அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஒஎன்ஜிசி திட்டம் போன்ற மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்கள், கடலூரில் என்எல்சி தற்பொழுது நிலம் கையகப்படுத்தும் திட்டம் என மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை பாலைவனமாக மாற்ற பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறது. என்எல்சி ஏற்கனவே 50 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்தப் பணியும் நடைப்பெறாமல் வைத்துள்ளது. இதில் சுரங்கம் அமைத்தால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு போதுமானது. கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தால் 10 அடியில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் இன்று 600 அடிக்கு கீழே சென்றுவிட்டது. ஏற்கனவே விவசாயிகள் மழை இல்லாமலும், வெள்ளத்தாலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கிய நிலையில் விவசாய பொருட்களுக்கு உரிய விலை இல்லை, இடுபொருட்கள் அதிக விலை ஏற்றம் என விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதி நிலம் மூன்று போகம் விளையும் பொன்னான பூமி இதனை என்எல்சி நிறுவனம் எடுப்பது மிகவும் அபாயகரமானது. இது விவசாயிகளுக்க இழைக்கும் அநீதி. இதனை இன்னொரு ஸ்டெர்லைட்டாக மாற்றிவிட வேண்டாம். தமிழக அமைச்சர்கள் 33 பேரும் தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கின்றனர். இவர்கள் பூனைக்கு தோழனாகவும், பாலுக்குக் காவலனாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அது எப்படி முடியும், இவர்கள் சாப்பிட வேண்டும் என்றால் கூட டெல்லியில் இருந்து தகவல் வந்தால்தான் சாப்பிடுவார்கள் போல் உள்ளது.
மாவட்ட அமைச்சர் எம்.சி சம்பத் இது மத்திய அரசின் திட்டம், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். மின்சாரத்திற்கு மாற்று உண்டு ஆனால் உணவிற்கும், விவசாயத்திற்கும் மாற்று உண்டா? மின்சாரம் தயாரிக்க நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம் எனப் பல வகை உண்டும். தமிழகத்தைச் சுடுகாடாக மாற்றும் எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் உள்ளார், அவர் 24 மணி நேரமும் நிதானமாக இருப்பார். பக்கத்தில் பாண்டிச்சேரி இருப்பதால் அப்படி இருப்பார் போல, அவர் சரக்கு சண்முகமாகச் செயல்படுகிறார். இப்பொழுது அரசை நடத்துவதே ஐஏஎஸ் அதிகாரிகள்தான்,
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளரை விசாரிக்க வேண்டும் எனக் கூறுகிறார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினத்தில் கலெக்டராக இருந்த போதுதான் சுனாமி வந்தது அதில் சிறப்பாக செயல்பட்டவர், இப்பொழுதும் திறமையாக செயல்பட்டு வருகிறார். அவரை போய் விசாரிக்க வேண்டும் எனக் கூறுகிறார். இது என்ன நியாயம். இப்பகுதி மக்கள் அமைதியானவர்கள், இவர்களைச் சீண்டி பார்க்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஒரு இன்ச் நிலத்தை கூட தர முடியாது. என்எல்சி நிறுவனம் முன்பு நிலம் எடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு என எதையும் முறையாகச் செய்யவில்லை. என்எல்சி நிறுவனம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் 3 மாதம்தான் உங்கள் ஆட்டம், தொடர்ந்து வாலை நீட்டினால் என்எல்சியை இழுத்து மூடும் நிலை ஏற்படும்.”இவ்வாறு அவர் பேசினார்.