சமூக விரோதிகளின் கூடாரமாகிறதா…? T வாடிப்பட்டி…!
மதுரை மாவட்டம் T வாடிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு சமூக வலைதளம் மூலம் புகார்கள் அளித்து வருவதாக அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக T வாடிப்பட்டி அருகேயுள்ள சானாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில் மதுரை,திண்டுக்கல் இரண்டு மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது சானாம்பட்டி கிராம். இந்த பகுதி மதுரை மாவட்டம் T வாடிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது. இந்த பகுதியில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, மூனாம் நம்பர் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக காவல்நிலையத்திற்கு பல முறை தகவல்கள் கொடுத்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராயம், கஞ்சா, மூனாம் நம்பர் லாட்டரி விற்பனை செய்பவர்கள் நாங்கள் காவல்நிலையத்தில் மாமூல் கொடுத்துத்தான் தொழில் செய்கிறோம் என்கிறார்கள். சில நேரங்களில் காவலர்கள் ரோந்து வரும் போது ரயில்வே கேட்டைத் தாண்டி திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் சென்று விடுங்கள் என்று சமூக விரோதிகளை தப்பிக்க விடுகிறார்கள். செயின் பறிப்பு வழக்குகள் இருபது வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது.
விவசாய பம்புசெட்டுகள் திருட்டு, கோவில்களில் ஐம்பொன் சிலைகள் திருட்டு,புதையல் தேடி பூசாரி கொலை, என பல்வேறு கொலை,கொள்ளை வழிப்பறி, செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது போன்ற வழக்குகளின் விசாரணைகள் கிணற்றில் போட்ட கல்லைப் போல் உள்ளது என்றார்.
இது சம்பந்தமாக T வாடிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளரிடம் கேட்ட போது கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவரை கடந்த வாரம் கைது செய்து இருக்கிறோம். இன்னும் சிலரை விரைவில் கைது செய்து விடுவோம். மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறான தகவல்கள். எனக்கு எதிராக சிலர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். கொரோனா காலம் என்பதால் சில வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. விரைவில் முடித்து விடுவோம் என்றார்.
எது எப்படியோ சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தால் தீய பழக்கங்களால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.