தமிழகம்

கடலில் மூழ்கும் சென்னை… : அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல்!!

சென்னை நகரில் இருக்கும் மயிலாப்பூர், திருவான்மியூர், அடையாறு ஆகிய இடங்கள் பாதிக்கப்படாது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வு நிறுவனம் ஒன்று சென்னை புறநகரில் பாதிப்புக்கு உள்ளாகும் நகரங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், இன்னும் 10 முதல் 30 ஆண்டுகளுக்குள் கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் பாதிக்கப்படும் நகரங்களை குறிப்பிட்டுள்ளனர். இதனால், பொருளாதாரம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், ஆசிய நாடுகள் அதிகளவில் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
வரும் 2050ஆம் ஆண்டில் சென்னைக்கு புறநகரில் இருக்கும் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் மற்றும் பெருங்குடி ஆகியவை கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் இதுவரை பாதிக்கப்படும் என்று நம்பப்பட்டு வந்த மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் ஆகிய இடங்கள் பாதிக்கப்படாது என்றும், பாதுகாப்பானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக பொருளாதார அமைப்பு உலக பாதிப்பு அறிக்கை ஒன்றை நடப்பாண்டில் வெளியிட்டு இருந்தது. அதில், கடல் மட்டம் அதிகரித்து நகரங்கள் பாதிக்கப்படும்போது, சாலை, துறைமுகம் பாதிக்கப்படும் என்பதுடன் குடிநீர், இணையதளம், எரிசக்தி வாயு கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நீர் மட்டம் விரைவாக உயர்வதற்குக் காரணம் கார்பன் அதிகளவில் வெளியேறுவதுதான் என்று கூறப்பட்டு வருகிறது. கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், இயற்கை சீரழிவை தடுப்பது என்பது கடினம்.

முன்பு கணிக்கப்பட்டதை விட கடற்கரை நீர் மட்டம் உயர்வது என்பது குறைவாகவே இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
“ஐபிசிசி அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும், கடல் நீர் மட்டம் 3 மி.மீட்டர் உயருகிறது. இதே அளவு நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் 9 மி. மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும். இது பெரிய அளவில் மிரட்டலாக இருக்காது. அடுத்த 100 ஆண்டுகளில், 20 மீட்டர் தொலைவிற்கான கடற்கரையை ஒட்டிய பகுதிகள் நீருக்குள் மூழ்கும்” என்று அண்ணா பல்கலைக் கழகத்தின் புவியியல் துறை தலைவர் எல்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

கடற்கரை ஆராய்ச்சிக்கான தேசிய மைய அறிஞர் ஒருவர் கூறுகையில், ‘’உள்ளூர் நிலவரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் நகரங்கள் என்று கூறப்பட்டு இருக்கும் இடங்கள் கடலுடன் தொடர்புடையதா என்று பார்க்க வேண்டும். வெள்ளம் என்பது சுழற்சி, பல ஆண்டுகள் இடைவெளியில் ஏற்படக் கூடியது. இதை சரியாக அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button