அடையாள அட்டை வழங்க குழு அமைத்ததால் பத்திரிகையாளர்கள் அதிருப்தி
பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ஐந்து நபர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி, பருவ இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான அடையாள அட்டை வழங்க வேண்டி தொடர்ந்து வலியுறுத்தியதின் விளைவாக மக்கள் தொடர்பு அலுவலகத்தின் வாயிலாக மாதிரி அடையாள அட்டையை பத்திரிகையாளர்களிடம் வழங்கி பத்திரிகையாளர்களையே அடையாள அட்டையை தயார் செய்து வாருங்கள். நாங்கள் கையொப்பமிட்டு தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
மக்கள் தொடர்பு அலுவலரின் அறிவுறுத்தலின் படி அடையாள அட்டையை பத்திரிகையாளர்கள் தயார் செய்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திடீரென ஐந்து நபர்கள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டதால் பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று நபர்கள் அரசு அதிகாரிகள், இரண்டு பேர் தூத்துக்குடி பிரஸ்கிளப் உறுப்பினர்கள். தூத்துக்குடியில் ஐந்து பத்திரிகையாளர் சங்கங்கள் இருக்கும் போது பிரஸ்கிளப் உறுப்பினர்களை மட்டும் அடையாள அட்டை வழங்கும் குழுவில் மாவட்ட ஆட்சியர் நியமித்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நான்காம் தூண் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பண்ணீர் செல்வம் கூறுகையில் தூத்துக்குடியில் ஐந்து பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இருக்கிறது. சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசி சுமூகமான முடிவெடுத்து மாவட்ட ஆட்சியர் அடையாள அட்டை வழங்க குழுவை அமைத்திருக்கலாம். ஆனால் யாரையும் அழைத்து பேசாமல் தன்னிச்சையாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்தது ஒட்டு மொத்த பத்திரிகையாளர் சங்கங்களையும் புறக்கணித்ததாகவே கருதுகிறோம். ஆகையால் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் ஒன்றினைந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பேச இருக்கிறோம் என்றார்.