சொகுசு பேருந்து என்கிற பெயரில் கட்டண கொள்ளை
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் சோமனூர் பகுதி பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில்தான் பிரதான தொழில். விசைத்தறி தொழிலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் தினக் கூலித் தொழிலாளர்கள்.
விசைத்தறி கூடங்களுக்கு அன்றாட வேலைக்குச் செல்வதற்கு அரசுப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அரசுப் பேருந்துகளில் தற்போது பயணிப்பதை தவிர்த்து ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்துகிறார்கள். இதுகுறித்து கேட்டபோது கருமத்தம்பட்டி போக்குவரத்து பணியில் உள்ள கிளை மேலாளர் இந்த பகுதியில் சாதாரண கட்டணத்தில் இயங்கி வந்த பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து சிறப்பு கட்டணத்தில் பேருந்துகளை இயக்கி வருகிறார். சாதாரண பேருந்துகளையும் சொகுசு பேருந்துகளாக மாற்றி கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தியதால் இந்த சொகுசு பேருந்துகளில் மிட்டாமிராசு தாரர்கள் மட்டுமே பயணிக்க முடியும். சாதாரண தினக்கூலித் தொழிலாளர்களான நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு வசதி இல்லை.
சொகுசு பேருந்து என்கிற பெயரில் கட்டண கொள்ளை அடிக்கிறார்கள். சோமனூரில் இருந்து உக்கடம் செல்வதற்கு நாற்பத்தி ஐந்து ரூபாய் வசூலிக்கிறார்கள். கருமத்தம்பட்டியிலிருந்து கோவைக்கு பதினெட்டு ரூபாய் வசூலிக்கிறார்கள்.
இதனால் பொதுமக்களும் விசைத்தறி கூலித் தொழிலாளர்களும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி பணிமனை கிளைமேலாளரிடம் காலை, மாலை வேலைகளில் சாதாரண கட்டணத்தில் செல்லும் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் அதிக கட்டணத்தில் சொகுசு பேருந்துகளையே அதிகமாக இயக்குகிறார். அதனால்தான் பெரும்பாலான பொதுமக்களும், தொழிலாளர்களும் தனியார் வாகனங்களையும், ஷேர் ஆட்டோக்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால் பணமும் மிச்சமாகிறது.
பொதுமக்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் நிறைவேற்றுவது தான் அரசு அதிகாரிகளின் கடமை. ஆனால் கடமையை மறந்து தான்தோன்றித்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் எங்கள் பகுதியில் சாதாரண கட்டணத்தில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியருக்கும் கோவை மேற்கு மண்டல போக்குவரத்து அதிகாரிக்கும் பல முறை கடிதங்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையம் இதுவரை எடுக்கவில்லை. கருமத்தம்பட்டி பணிமனை கிளைமேலாளரும் சொகுசுப் பேருந்துகளை மாற்றி சாதாரண பேருந்துகளை இயக்க மறுக்கிறார்.
இதனால் சோமனூர் காரணம்பேட்டை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஒரு ஆட்டோ ஓட்டுனர் தினசரி இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அரசுக்குச் சேர வேண்டிய வருவாய் தினசரி தனிநபர்களுக்குச் செல்வதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதிகமான ஷேர் ஆட்டோக்கள் வரைமுறையின்றி சாலைகளில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது. அரசிடம் சம்பளத்தை பெற்றுக் கொண்டு குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படாத கருமத்தம்பட்டி போக்குவரத்து பணிமனை கிளைமேலாளரின் அலட்சிய போக்கினை கண்டித்து மாவட்ட ஆட்சியரும், மேற்கு மண்டல போக்குவரத்து அதிகாரியும் இந்தப் பகுதிகளில் சொகுசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சிரும் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
– முத்துபாபு