சிசிடிவி முறைகேடு வழக்கு:காவல்துறை உயர் அதிகாரிகள் உடந்தையா?
போக்குவரத்து காவல்துறையில் நடந்த சிசிடிவி முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ரூ.3 கோடி அளவுக்கு நடந்த முறைகேட்டில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு என சந்தேகிக்கப்பட்ட நிலையில், ஆய்வாளரை விசாரணை அதிகாரியாக கொண்ட மத்திய குற்றப்பிரிவு, விசாரணையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியது.
கடந்த 2010ம் ஆண்டு சென்னையில் 40 இடங்களில் சிசிடிவி பொருத்துவதற்கு மூன்று கோடி ரூபாய் நிதியை போக்குவரத்து காவல் துறைக்கு அரசு ஒதுக்கியது. இந்த பணிகளை மேற்கொள்ள லுக்மேன் எலக்ட்ரோ போஸ்ட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் சிசிடிவியை முறையாக பொருத்தாமல் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பணிகளை தொடங்குவதற்கு முன்பே ஒப்பந்த விதிகளை மீறி 90 விழுக்காடு நிதியான 2 கோடியே 63 லட்சம் ரூபாயை பெற்று அந்நிறுவனத்திற்கு வழங்கியதிலும் முறைகேடு என சந்தேகம் எழுந்தது.
முறையாக சிசிடிவி பொருத்தப்படாத போது மூன்று தவணைகளில் எவ்வாறு ஒப்பந்த தொகை அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது? மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட அதே நிறுவனத்திடம் 2020ம் ஆண்டு வரை 300 காவல் நிலையங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழுந்தன. குறிப்பாக அப்போது பொறுப்பில் இருந்த பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து ஒப்பந்த தொகையை நிறுவனத்திற்கு வழங்க உத்தரவிட்ட போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையர்கள் மற்றும் இதில் தொடர்புடைய பல்வேறு உயர் அதிகாரிகளையும் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்ற நிலை ஏற்பட்டது. போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் சந்திரன் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் இதை விசாரித்து வருகிறார். ஆனால் அவரைவிட உயர் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரிகளை எவ்வாறு அவர் விசாரிப்பார் என்ற சிக்கல் எழுந்தது.
ஓய்வு பெற்ற போக்குவரத்து திட்டமிடுதல் துணை ஆணையர் சிவானந்தம் மற்றும் அமைச்சுப் பணி சூப்பிரண்டு என மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
பொறுப்பில் இருந்த உயர் அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு அதிகாரம் கொண்ட எஸ்பி அளவிலான ஒரு அதிகாரியை நியமித்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் திட்டமிட்டனர். அதே நேரத்தில் முறைகேட்டில் தொடர்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த வழக்கை மாற்றவும் ஆலோசனை செய்தனர்.
இதனிடையே நிறுவனத்தின் உரிமையாளர் ஜாமீன் மனு தாக்கல் செய்ததால், அந்த வழக்கில் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டது. அதுவரை அவரைக் கைது செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியது. இதனால் உயர் அதிகாரிகளை விசாரிக்க முடியாமலும், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரை விசாரிக்க முடியாமலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திணறனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையில் நடந்த சிசிடிவி முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.