தமிழகம்

அப்பாவி கூலித் தொழிலாளர்களை ஏமாற்றி ரூ. 500 கோடி மோசடி..

விருதுநகர் விவகாரம்

விருதுநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், சுடுகாட்டு தொழிலாளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்து சுமார் ரூ. 500 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. விருதுநகர் ஓ.எம்.எஸ் பருப்பு மில் உரிமையாளரான வேல்முருகன், அவரது மைத்துனர் செண்பகம், இடைத்தரகர்கள் சோலை ராஜா, செல்வி, உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலருக்கு வங்கியில் பணம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை காட்டும் இந்த கும்பல், அவர்களை வங்கிக்கு அழைத்துச் சென்று படிவங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்து அனுப்பி வைப்பார்கள். ஆனால் தொழிலாளர்கள் பெயரில் 20 லட்சம் முதல் 80 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்வார்கள்.
தொழிலாளர்கள் பெயரில் பருப்பு மூட்டைகள் இருப்பில் வைப்பதாகவும், அதற்கு கடன் பெறுவதாகவும், இதற்கு பதிலாக பணம் தருவதாகவும் வேல்முருகன் கும்பல் ஆசை வார்த்தை காட்டும். இதற்கு சம்மதிக்கும் தொழிலாளர்கள் பெயரில் கடன் வாங்கி விட்டு அதனை கட்டாமல் விட்டு விடுவது இந்த கும்பலின் வழக்கம்.

வேல்முருகன், செண்பகம்


தொழிலாளர்கள் பெயரில் பல லட்ச ரூபாய்க்கு கடன் வாங்கி விட்டு, அதனை கட்டாமல் விட்டதால் விருதுநகரில் பல நூறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக வங்கிகள் அனுப்பிய நோட்டீசை கண்டு மனம் கலங்கி, அதனாலேயே பலரும் உயிரிழந்த கொடுமையும் நிகழ்ந்துள்ளது.
மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், தங்களிடம் இருப்பில் உள்ள பொருட்களின் மதிப்பில் 80 சதவிகிதம் வரை வங்கிகளில் கடன் பெற முடியும். இந்த கடனை பெற, வியாபாரிகள் தங்களிடம் உள்ள பொருட்களை வங்கி அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.
வங்கியின் கள அலுவலர் அந்த பொருட்களை பார்வையிட்டு, அவற்றின், மதிப்பு, தரம் ஆகியவற்றை சரி பார்த்து ஒப்புதல் வழங்கினால், அதன் பின்னர் வங்கி கடன் வழங்கும். இந்த நடைமுறையை வேல்முருகன் கும்பல் மிகத் தந்திரமாகப் பயன்படுத்தி, திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது என்பது புகாராகும்.
இதனிடையே மோசடி குறித்து தொழிலாளர்கள் சிலர் கொடுத்த புகாரின் பேரில் தேனி மாவட்டம் பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரணை நடத்தி, வேல்முருகன், செண்பகம், சோலைராஜா, சன்னாசி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளார். அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 294 பி, 406,420, 465,468, 471,506/1, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக செண்பகத்தின் மகளும் ஆடிட்டருமான இந்துமதி, அவரது கணவர் விமல்குமார், பெரியகுளம் தென்கரை எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளர் ராமநாராயணன், வங்கியின் கள அலுவலர் தீபா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆலை அதிபர் என்ற பெயரில் வலம் வந்த வேல்முருகன் செய்த மோசடிகள் குறித்து பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வேல்முருகன் கும்பல் நிலக்கோட்டை, பெரியகுளம், தேனி, தென்கரை ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகளில் மட்டுமே கைவரிசை காட்டி உள்ளது.
இந்த நான்கு வங்கிகளிலும் கள அலுவலராக தீபா என்பவர் பணியாற்றிய கால கட்டத்தில் தான், மோசடிகள் நடைபெற்று உள்ளன. கள அலுவலரான தீபாதான், இருப்பில் உள்ள பொருட்களை சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் அளிக்கும் ஒப்புதலின் பின்னரே வங்கி கடன் அளிக்கும் என்பதால், இந்த மோசடியில் அவருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
மேலும் வேல்முருகன் கும்பல், நான்கு வங்கிகளிலும் இருப்பில் இருப்பதாக கணக்கு காட்டிய உளுந்து, பருப்பு, காப்பிக் கொட்டை உள்ளிட்டவையும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. சந்தைகளில் கிடைக்கும் விலை மலிவான நான்காம் ரக பருப்புகளை வாங்கும் இந்த கும்பல், அதனை உயர்ரக பருப்பு என இருப்பு காட்டி, அவற்றின் மதிப்பை அதிகரித்து கணக்கு காட்டும், இதே நேரத்தில் நூறு மூட்டைகள் இருப்பில் வைத்தால், அதில் 20 மூட்டைகளில் மட்டுமே பருப்பு இருக்கும் என்றும், 80 மூட்டைகளில் தவிடு மட்டுமே இருக்கும் என்றும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, பல நூறு கோடி ரூபாய்களை மோசடி செய்ததோடு, தொழிலாளர்கள் வாழ்வோடும் விளையாடிய வேல்முருகன் உள்ளிட்டோருக்கு வங்கி அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பலரும் துணை செய்துள்ளதாக போலீசார் கருதுகிறார்கள். இதனால் மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
வேல்முருகனும், செண்பகமும் கடந்த 2013 ஆம் ஆண்டு 18 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி எண்ணெய் திருடு போன வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வேல்முருகன் உள்பட 5 பேரை பெரியகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், தென்கரை எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் உள்பட ஐந்து பேர் முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் விருநகரில் உள்ள வேல்முருகனின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்னர் அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். வேல்முருகனின் நெருங்கிய உறவினர் கலைச்செல்வியின் விருதுநகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். . இதே போன்று கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள வேல்முருகனின் உறவினரான இந்துமதி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 9 இடங்களில் போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button