ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்த போது காய்கறிகள் ஏற்றிவந்த வாகன ஓட்டுநரும் , காய்கறி வியாபாரம் செய்பவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவித்துள்ளனர்.
காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் காய்கறிகள் ஏற்றிவந்த வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது காய்கறி மூட்டையில் கர்நாடகாவில் தயாரான ஏராளமான மதுப்பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மேலும் விசாரித்த போது காய்கறிகள் மூட்டையில் மதுப்பாட்டில்களை மறைத்து வைத்து பலமுறை கடத்தியதாகவும், சோதனைச்சாவடியில் காவலர்கள் விசாரணை செய்த போது தாளவாடியில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு வருவதாக கூறி காவல்துறையை ஏமாற்றிச் சென்றதாகவும் அந்த வாகன ஓட்டுநர், காய்கறி வியாபாரம் செய்பவர் இருவரும் கூறியுள்ளனர்.
காய்கறி மூட்டையில் மது பாட்டில்கள் கடத்திய வாகன ஓட்டுநர், காய்கறி வியாபாரி உள்ளிட்ட இருவரையும் கைது செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தால் மதுப்பாட்டில்கள் கடத்திவரும் ஏராளமான வாகனங்கள் பிடிபடலாம் எனத் தெரியவருகிறது.
செளந்திரராஜன்.