திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடதில்லை கிராமத்தில் அறுந்து தொங்கிய மின்சார கம்பியை சரிசெய்தால் நன்றாக இருக்கும் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்ததால் திமுகவினரின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி செல்வராஜ்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வடதில்லை பஞ்சாயத்து தலைவர் பதவி திமுக வசம் உள்ளது. இந்த கிராமத்தில் மின்சார கம்பி ஆபத்தான நிலையில் அறுந்து தொங்கிக் கொண்டு இருந்திருக்கிறது. இதனைக் கண்ட ஆம் ஆத்மி கட்சியின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தனது முகநூலில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பியை சரி செய்தால் நன்றாக இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த அந்த பகுதியின் திமுக இளைஞரணி நிர்வாகி தில்லைக்குமார் மற்றும் அவருடன் திமுக கட்சியினர் சிலர் சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். இதனால் படுகாயமடைந்த செல்வராஜ் மயங்கி கீழே விழுந்து கிடந்திருக்கிறார்.உயிருக்கு போராடிய செல்வராஜை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியின் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியதோடு அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் கூறுகையில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி நிர்வாகி தில்லைக்குமார் உள்ளிட்ட திமுக கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வழி வகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.