இருபது தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். திமுக, அமமுக கட்சியினர். இவர்களை விட சற்று முந்திக்கொண்டு தேர்தல் பொருப்பாளர்களையே அறிவித்து பணப்பட்டுவாடாவையும் ஆரம்பித்து விட்டார்கள் அதிமுகவினர். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் இன்னமும் முடிவெடுக்கவில்லை. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாதத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் தேர்தல் தேதியை அறிவிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில்தான் முதல் ஆளாக முந்திக் கொண்டு தேர்தல் பொருப்பாளர்களை அறிவித்துள்ளது எடப்பாடி அன் கோ. அதிரடியாக தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தாலும் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக இல்லை. தினகரன் தரப்பில் மேல்முறையீட்டிற்குச் சென்றால் தேர்தல் தள்ளிப்போகும் என எதிர்பார்த்து காத்திருந்தது எடப்பாடி தரப்பு.
அமைச்சர்கள் உட்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் களத்தில் இறக்கியும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. ஒரு தொகுதியிலேயே இத்தனை பிரச்சனை என்றால் 20 தொகுதிகளை எப்படி சமாளிப்பது என்கிற கவலையில் இருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.
தினகரன் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று சொல்லி இருக்கிறது. அதனால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் சிலரை வளைத்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு. தேர்தலை முடிந்தவரை தள்ளிப்போடுவதுதான் எடப்பாடி அணியினரின் திட்டமே. அதேசமயம் சும்மா இருந்தால் வெளிப்படையாகத் தெரிந்து விடும் என்பதற்காக தேர்தல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 4 பேரை தினகரனிடம் இருந்து அதிமுகவுக்கு இழுக்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர் எடப்பாடி அணியினர்.
தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை அதிமுக பக்கமாக இழுத்து மேல்முறையீடு செய்ய வைத்து தேர்தலை தள்ளிப்போட அமைச்சர் உதயகுமாரை களமிறக்கிள்ளது எடப்பாடி தரப்பு.
இந்நிலையில் பரமக்குடியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதேநாளில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமமுக தரப்பினரும் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். பரமக்குடியில் தேர்தல் பரபரப்பில் இருந்த அரசியல் கட்சியினர் மத்தியில் தேர்தல் நடந்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று பொதுமக்களிடம் கேட்டபோது, பல வருடங்களாக தேர்தலில் சீட் கேட்டு கடந்த தேர்தலில் தான் டாக்டர் முத்தையாவுக்கு எம்.எல்.ஏவாகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தினகரன் பக்கம் சென்றதால் பதவியை பறிகொடுத்து மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார். இவருக்கு எதிராக அதிமுகவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலுச்சாமியின் மகன் வழக்கறிஞர் இந்திரஜித், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நிறைகுளத்தான் மகன் சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் ஆகியோர் தனித்தனியாக சீட் வாங்க முயன்று வருகிறார்கள். சதன் பிரபாகர் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மூலமாக எடப்பாடியிடம் வாய்ப்புக் கேட்க முயற்சி செய்து வருகிறார்.
முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன் அமைச்சர் மணிகண்டன் மூலமாக முயற்சி செய்து வருகிறார். இவருக்கு சீட் கிடைத்தாலும் அமைச்சர் மணிகண்டனுக்கு மக்கள் மத்தியிலும் அதிமுகவினர் மத்தியிலும் இருக்கும் அதிருப்தியின் காரணமாக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதாகவே தெரிகிறது. இந்திரஜித் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மூலமாக சீட் வாங்க இருப்பதாக தெரிகிறது. இவரது தந்தை பாலுச்சாமிக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. சாதி, மத பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பரிந்துரை செய்பவருக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் இந்திரஜித்துக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
திமுகவை பொருத்தமட்டில் ஏற்கனவே கடந்த தேர்தலில் வெற்றியை பறிகொடுத்த திசை வீரனுக்கே சீட்கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ்களின் ஆதரவு உள்ளதால் நகரின் பெரும்பான்மை வாக்கு வங்கியான சௌராஸ்ட்ரா சமுதாயத்தின் வாக்குகள் திமுகவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவின் வாக்கு வங்கியை டிடிவி பிரித்தால் ஆளும் தரப்பிற்கு வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகவே அமையும். திமுகவை பொருத்தவரை முன்னாள் மாவட்டச் செயலாளர் திவாகரன் மற்றும் தற்போதைய மாவட்ட பொருப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்படாமல் ஒற்றுமையாக செயல்பட்டால் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
- சூரியன்