ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளில் சாதனைகளை விளக்கி மலர் வெளியிடாதது ஏன்? : கொந்தளித்த தொண்டர்கள்…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவித்தவுடனேயே அதிமுகவில் பழனிச்சாமிக்கும், பன்னீர் செல்வத்துக்குமான பிரச்சனை உச்சநீதிமன்றத்திற்கு சென்று பாரதீய ஜனதா கட்சி பஞ்சாயத்து செய்து இரட்டை இலை சின்னத்தை பழனிச்சாமி பெற்றார். தேர்தல் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபி.முனுசாமி கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டது சம்பந்தமாக பேசியதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒரு ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசுவை ஆதரித்து கே.பி.முனுசாமி தேர்தல் பணியாற்றி வந்தார். அந்த தொகுதியைப் பொறுத்தவரை கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவிற்குமான வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள். அதேபோல் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணி 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வாங்கிய வாக்குகளை விட அதிகமாகவே அல்லது அந்த வாக்குகளைப் பெற்று விட்டால் அதிமுகவில் பழனிச்சாமி கை ஓங்கி விடும். ஆகையால் அதிமுகவின் வாக்குகளை குறைக்கும் நோக்கத்தில் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி பேசிய ஆடியோவை வெளியிட்டதாக அதிமுகவினர் பேசி வந்தனர்.
அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி மோதல் பெரிதாகி நான்கு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவர் மீது மற்றொருவர் பழிகளை சுமத்தி மேலும் பிரிவினைக்கு வழிவகுத்து வருகின்றனர். குறிப்பாக கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றோர் பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு தான்தோன்றித்தனமாக பேசி வருகின்றனர். இவர்கள் இருவரையும் பழனிச்சாமி அடக்கி வைத்திருந்தாலே இந்நேரம் அதிமுக ஒன்றிணைந்து வலுவான எதிர்க்கட்சியாக இருந்திருக்கும்.
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் கே.பி.முனுசாமி பேசிய ஆடியோவை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டு மேலும் பரபரப்பை உருவாக்கினார். இது பழனிச்சாமிக்கு கொடுத்த நெருக்கடியாகவே பார்த்தார்கள். மேலும் இதுசம்பந்தமாக விரைவில் வீடியோ ஒன்றையும் வெளியிட இருப்பதாக கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்.
இந்த ஆடியோ வெளியானதில் அந்த தொகுதியில் பணியாற்றி வந்த கே.பி.முனுசாமிக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது குரல் மிகவும் பரிச்சயமான குரல் என்பதால் அனைவருமே நம்பி விட்டார்கள். ஏற்கனவே பொன்னையன் பேசிய ஆடியோ வெளியானதால் அதிமுகவில் அவரது செல்வாக்கு குறைந்து கட்சிப்பதவியும் பறிக்கப்பட்டது. அதேபோல் கே.பி.முனுசாமிக்கும் கட்சியில் அதிருப்தி அதிகரித்து செல்வாக்கு குறைந்து அவரது பதவியும் பறிக்கப்படும் நிலை உருவாகும் என்றார்கள். ஏற்கனவே கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என கூறிவந்த அதிமுகவினர் தற்போது பல அணிகளாக பிரிந்து கிடப்பதால் பிப்ரவரி 24ஆம் தேதி அவரது 75 வது பிறந்தநாளைக் கொண்டாட எந்தவித பணிகளையும் மேற்கொள்ளாமல் இருந்தார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் 75வது பிறந்தநாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள்.
அரசியல் கட்சித் தலைவர்களின் 75வது பிறந்தநாளில் பவளவிழா மலர் வெளியிட்டு அந்த மலரை பொக்கிஷமாக கட்சியினர் கருதுவது வழக்கம். அதேபோல் ஜெயலலிதாவின் பவளவிழாவிற்கு மலர் வெளியிடுவதாகவோ கூட்டங்கள் நடத்தி அவரது சாதனைகளை விளக்கும் விதமாக எந்தவித ஏற்பாடுகளும் யாரும் செய்யவில்லை. பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இருவரும் தங்கள் சொந்தப் பிரச்சனையால் ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள். இதனால் அதிமுக வாக்கு வங்கியும் குழம்பிப் போயின.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் என்பது ஆளும் திமுகவுக்கு சாதகமாக அமைந்தாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒத்திகையாகத்தான் அரசியல் கட்சியினர் பார்த்து வருகின்றனர். ஆனால் அதிமுகவில் யார் தலைமைக்கு வரவேண்டும் என்பதைத முடிவு செய்யும் தேர்தலாக அதிமுகவினர் பார்த்தார்கள். ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை அதிமுக பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபடாமல் ஆடியோ, வீடியோ வெளியிட்டு உட்கட்சி பிரச்சனையில் சிக்கித் தவித்ததோடு அதிமுகவின் வாக்கு வங்கியையும் இழந்தனர். மேலும் கழகத்தை கட்டிக்காத்த ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளில் அவரது சாதனைகளை விளக்கி மலர் வெளியிடாததால், அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மீது கடுமையான கோபத்தால் இருப்பதாக தெரியவருகிறது.