மாந்திரீகம் செய்வதாக பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியார்

மாந்திரீகம் எனச் சொல்லி, பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த போலிச் சாமியாரை விழுப்புரம் மாவட்ட காவல் துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை பூர்விகமாகக்கொண்ட பெருமாள் மணி என்ற செல்வமணி (35), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஓங்கூர் என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பில்லி, சூனியத்தை எடுக்கும் ஸ்பெஷலிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருந்த இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், ‘அருள்வாக்கு சொல்வதாகக் கூறி, போலிச் சாமியார் செல்வமணி, எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்” என்று காஞ்புரத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரை முழுமையாகப் படித்து அதிர்ச்சிக்குள்ளான காவல் துறையினர், போலி சாமியார் செல்வமணியை உடனே கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. காவல் துறை வட்டாரத்தில் பேசினோம். “மாந்திரீகம், அருள்வாக்கு, பில்லி, சூனியம் என்ற பெயரில் பல ஆண்டுகளாகப் பொதுமக்களை ஏமாற்றிவந்திருக்கிறார் செல்வமணி. இவரின் செயல்களைத் தொடர்ச்சியாகக் கண்டித்த அவர் மனைவி, தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டதால், இவருக்கு இன்னும் வசதியாகிவிட்டது. தன்னிடம் அருள்வாக்கு கேட்க வரும் பெண்களிடம், ’உன் குடும்பத்துக்கு இருக்கும் தோஷம் நீங்க வேண்டும் என்றால், என்னுடன் நீ உடல் ரீதியாக இணைய வேண்டும்’ என்று சொல்லி, தனது வீட்டிலேயே தங்கவைத்துக் குடும்பம் நடத்துவதை வழக்கமாக்கிக்கொண்டார். சில நாள்களில், வேறு ஒரு பெண்மீது ஆசை வந்துவிட்டால், அவரை வலையில் விழ்த்தி, ஏற்கெனவே இருக்கும் பெண்ணை தோஷம் கழிந்துவிட்டது என்று கூறி அனுப்பிவிடுவார்.

அதேபோல இவருக்கு மிகவும் பிடித்த பெண்களைக் கணவர்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து, அவ்வப்போது அவர்களை பயன்படுத்திக்கொள்வதும் இவரது வழக்கம். இவரது அருள்வாக்குக்கு மயங்காத பெண்களை பில்லி, சூனியம் பெயரைச் சொல்லி பயமுறுத்தி வசியப்படுத்திவிடுவார். அப்படி வசியப்படுத்திய ஹேமா என்ற ஒரு பெண்ணுடன் காஞ்சிபுரத்தில் இருந்த தனது தொழில்முறை நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அருள்வாக்கு சொல்ல சென்றிருக்கிறார். அப்போது, அந்த வீட்டில் இருந்த 17 வயது பெண்மீது இவருக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. எப்படியாவது அந்தப் பெண்ணை வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்த போலிச் சாமியார் செல்வமணி, ‘உன் வீட்டில் சில பரிகார பூஜைகளைச் செய்ய வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் கன்னிப்பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது’ என்று கூறியிருக்கிறார். உடனே, பரிகாரங்கள் முடியும்வரை உங்கள் பெண் என்னுடன் இருக்கட்டும் என்று சாமியாருடன் வந்த பெண் வாஞ்சையாகப் பேசியதை நம்பி, தன் பெண்ணை அவர்களுடன் அனுப்பியிருக்கிறார்.
ஓங்கூருக்கு அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்த சாமியார் செல்வமணி, ’உன் வீட்டில் உள்ள தோஷங்கள் நீங்க வேண்டுமென்றால், என்னுடன் உடல் ரீதியில் நீ ஐக்கியமாக வேண்டும். அப்படி இல்லையென்றால், உனது குடும்பம் சிதைந்து நடுத்தெருவுக்கு வந்துவிடும்’ என்று மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில், அந்த மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பெண்ணும் அதற்குச் சம்மதிக்க, தினமும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் சாமியார். எனது மகளை என்னுடன் அனுப்புங்கள் என்று அந்தப் பெண்ணின் தந்தை கேட்கும்போதெல்லாம், உன் பிரச்னை முழுதாக சரியாகவில்லை. அதுவரை உன் மகள் எனது பாதுகாப்பில், என் வீட்டில் இருக்கட்டும்’ என்று கூறிவந்திருக்கிறார் செல்வமணி. அதையும் அப்படியே ஏற்றுக்கொண்டு திரும்பியிருக்கிறார் அந்தப் பெண்ணின் தந்தை. 1 வருடம் கடந்தும் பெண்ணை அனுப்பாததால், சாமியாருக்குத் தெரியாமல் தனது பெண்ணை மீட்டுக்கொண்டு வந்துவிட்டார் தந்தை. அப்போதுதான், 1 வருடமாக தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறியிருக்கிறார் அந்தப் பெண். அதன்பிறகுதான் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரின் பெயரில், போலிச் சாமியார் செல்வமணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஹேமா என்ற பெண்ணையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயாவிடம் பேசினோம். “அந்த செல்வமணிக்கு மாந்திரீகமெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால், அந்தப் பெயரைச் சொல்லி அவ்வப்போது பலரை ஏமாற்றிவந்திருக்கிறார். இதுவரை அவர் 3 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். வேறு ஏதேனும் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணைசெய்து வருகிறோம்” என்றார்.