தமிழக அமைச்சர்களில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் தான் உண்டு தன்துறை உண்டு என்று பெரும்பாலான அதிமுகவினரே சொல்லக்கூடிய அமைச்சர் செங்கோட்டையன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இன்றைய அதிமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர். இவரது தலைமையில் இருக்கும் பள்ளிக்கல்வித் துறையில் லஞ்சம் ரெக்கை கட்டி பறப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிமுக நிர்வாகிகளே நமது செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட போது நமக்கு வியப்பாக இருந்தது.
இது குறித்து அதிமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் அம்மாவின் சிவாஜி சின்னப்பன் கூறுகையில் கட்சியின் கொள்கைகளையும், ஆட்சியின் சாதனைகளையும் கிராமங்களில் வசிக்கும் அடிமட்டத் தொண்டர்களிடம் கொண்டு சேர்க்கும் தலைமைக் கழக பேச்சாளர்களில் நானும் ஒருவனாக ஜெயலலிதா காலத்தில் இருந்து பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடத்தில் சொல்லித்தான் கடந்த தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது அதிமுக. ஜெயலலிதா இறந்தபிறகு பழனிச்சாமி தலைமையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஆட்சியில் என்னைப் போன்ற பேச்சாளர்களின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
பெரும்பாலும் தமிழகம் முழுவதும் கட்சிக் கூட்டங்கள் பேச்சாளர்களை வைத்து நடத்துவது குறைந்துவிட்டது. இப்போது சில அமைச்சர்களே தொண்டர்களை உற்சாகப்படுத்துவதாக நினைத்து உளற ஆரம்பித்து விட்டார்கள். சில அமைச்சர்கள் தங்கள் மேதாவி போல் மீடியாக்கள் முன்பு மட்டுமே தோன்றுகிறார்களே தவிர கட்சிக் கூட்டங்களை தங்கள் பகுதிகளில் நடத்துவது இல்லை. இதனால் அதிமுகவில் பேச்சாளர்கள் வறுமையோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே எங்களை பயன்படுத்துவார்கள். நாங்கள் கடுமையாக உழைத்து தொண்டை வலிக்கக்கத்தி பிரச்சாரம் செய்ததால் தான் இப்போது அமைச்சர்களாகவும் எம்எல்ஏக்களாகவும் காரில் வலம் வருகிறார்கள். ஆனால் பேச்சாளர்கள் நடைபயணமாகத்தான் வலம் வருகிறோம்.
பேச்சாளர்களின் வறுமையை போக்கி வாழ்வாதாரத்தை மீட்க வேண்டி சில அமைச்சர்களிடம் அவரவர் வசிக்கும் பகுதிகளில் கட்சிக்காரர்கள் சிபாரிக்குச் சென்றால் பணம் இருக்கிறதா? பணம் இருந்தால் மட்டுமே வேலை நடக்கும் என்கிறார்கள். சில அமைச்சர்கள் செய்து தருகிறார்கள். தற்போது தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் அமைச்சராக இருக்கும் பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
தற்போது நடைபெறும் அரசியல் சூழ்நிலையில் எதிலும் தலையிடாமல் இருப்பவர் என்று காட்டிக்கொண்டு தனது துறையில் கடைசி நேரத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது மகன் கதிர், அவரது உறவினர்களான செந்தில், செல்வராஜ் மற்றும் சில உறவினர்கள் அனைவரும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் அமைந்திருக்கும் கட்டிடத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டு இடமாறுதல் கேட்டு வருபவர்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார்கள் !
தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சுயவிருப்பப்படி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மாவட்டத்திற்குள்ளேயே பணியிட மாற்றம் கேட்டால் எட்டு லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் செங்கோட்டையன் மகன் கதிரும், அவரது உறவினர்களும். இதுவே ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டம் என்றால் பத்து லட்சம் கேட்கிறார்கள். எனது உறவினருக்கு இடமாறுதல் கேட்டு சிபாரிசு கடிதத்தை கொண்டு சென்ற என்னிடமே பணம் கேட்கிறார்கள். அதிமுக ஆட்சி என்று சொல்லும் அமைச்சர்கள் அதிமுக கட்சிக்காரர்களிடமே பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்றால் இவர்களுக்கு அதிமுக கட்சிக்காரர்கள் வாக்களிப்பார்களா?
ஜெயலலிதா இருக்கும் போது அமைச்சர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள். ஆனால் இன்று அமைச்சர்களை கண்டிக்கும் வலிமை பழனிச்சாமிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் செங்கோட்டையன் துறையில் மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் இதே நிலைதான். கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு ஆட்சியில் இருக்கும் போதாவது வருமானத்திற்கு வழிவகுக்க வேண்டும். பேச்சாளர்களின் வறுமையைப் போக்க கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார்.
பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் அவர்கள் பிரச்சனை தீர்ப்பதற்கே வழி தெரியாமல் இருக்கும் போது பேச்சாளர்கள், தொண்டர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நேரம் கிடைப்பது கடினம்தான். ஆனால் தற்போது தேர்தல் நேரம் என்பதால் இவர்களை தொண்டர்கள் நினைக்க நேரம் இருக்குமா? இருக்காதா? என்பது தேர்தல் முடிந்ததும் தான் தெரியப்போகிறது.
– சூரியன்