தமிழகம்

தாம்பரத்தில் பரபரப்பு சம்பவம் : பிரிட்ஜ் வெடித்து தனியார் டிவி நிருபர் குடும்பத்துடன் பலி…

சென்னை கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவைச் சேர்ந்தவர் பிரசன்னா (வயது 35). தனியார் தொலைக் காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா (32). கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இவர்களுடன் பிரசன்னாவின் தாயார் ரேவதி (59) வசித்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல அர்ச்சனா பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். இரவு 11 மணிக்கு வேலை முடிந்து பிரசன்னாவும் வீட்டிற்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு பிரசன்னாவும், அர்ச்சனாவும் படுக்கையறைக்கு தூங்கச்சென்றனர். தாயார் ரேவதி வீட்டின் ஹாலில் உள்ள கட்டிலில் தூங்கினார்.
தாம்பரம் பகுதியில் இரவு பலத்த மழை பெய்ததால் கிழக்கு தாம்பரம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இரவிலும் மின்வெட்டு ஏற்பட்டு மின்சாரம் மீண்டும் வந்துள்ளது. இந்தநிலையில் 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது மின் கோளாறு காரணமாக வீட்டில் இருந்த ‘பிரிட்ஜ்’ (குளிர்சாதனப்பெட்டி) திடீரென தீப்பிடித்தது.
இந்த பிரிட்ஜ் மேல் பகுதி, கீழ்பகுதி என 2 கதவுகள் கொண்டது. இதில் மேல்பகுதி தீப்பிடித்து பிளாஸ்டிக் உருகத்தொடங்கியது. மேலும் பிரிட்ஜ்ஜில் இருந்து கியாஸ் வெளியேறியதால் மேல்பகுதி வெடித்து பிளாஸ்டிக் புகையுடன் கியாஸ் புகையும் சேர்ந்ததால் வீடு முழுவதும் கரும்புகை பரவியது.


ஏ.சி. எந்திரம் இயங்கியதால் வீட்டில் இருந்த அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் புகை வெளியேற முடியவில்லை. இதனால் வீட்டின் அனைத்து அறைகளுக்கும் புகை பரவியது. பிரிட்ஜ் அருகே பிளாஸ்டிக் கதவுகளால் அமைக்கப்பட்ட பூஜை அறை கதவுகளும், மின்வயர்களும் சேர்ந்து எரிந்ததால் வீட்டில் கரும்புகை ஏற்பட்டது.
இதில் தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பிரசன்னாவும், அவரது மனைவி அர்ச்சனாவும் படுக்கை அறையில் இருந்து எழுந்து உயிர் தப்பிக்க வெளியில் வந்தனர். ஆனால் புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். தாயார் ரேவதியும் மயங்கி விழுந்தார். மயங்கிக்கிடந்த 3 பேரும் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
இதற்கிடையே அடுத்தநாள் காலை துர்கா என்ற வேலைக்கார பெண் வீட்டின் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவை யாரும் திறக்காததாலும், வீட்டில் இருந்து மின்கம்பிகள் கருகிய வாசனை வந்ததாலும் ஏதோ அசாம்பாவிதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து கிடந்தன. மேலும் பிரசன்னா, அர்ச்சனா மற்றும் ரேவதி ஆகியோர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்த்தபோது தீ முற்றிலும் அணைந்திருந்தது.
மேலும் பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, சேலையூர் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
மின்கசிவு காரணமாக ‘பிரிட்ஜ்’ தீப்பிடித்து வெடித்து, அதில் இருந்த கியாஸ் வெளியேறியதால் ஏற்பட்ட புகையில் சிக்கி மூச்சு திணறலால் 3 பேரும் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பலியானவர்கள் உடல்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் கிழக்கு தாம்பரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து நடைபெற்ற வீட்டின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ஸ்ரீமதி கூறுகையில், ‘அமைதியான குடும்பம். அவர்கள் உண்டு, வேலை உண்டு என இருப்பார்கள். ரேவதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார். பிரசன்னாவும், அர்ச்சனாவும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அன்பாக பழகுவார்கள்.
ரேவதி வீட்டில் தண்ணீர் இல்லாததால் லாரி தண்ணீர் வேண்டும் என சொல்லியிருந்தார். லாரி டிரைவரிடம் காலை 5 மணிக்கு கேட்டை திறந்து வைக்கிறேன். தண்ணீர் கொண்டு வா என சொல்லியிருந்தார். அதற்குள் அநியாயமாக எமன் அழைத்து கொண்டான். விபத்து நடைபெற்றபோது எந்த சத்தமும் இல்லை. சத்தம் வந்திருந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சென்று காப்பாற்றி இருக்கலாம்’ என்று உருக்கமாக கூறினார். ஸீ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button