கொரோனாவிற்கு எதிராக இணைந்த கைகள்…வீடுகளுக்கே சென்று உதவி வரும் நண்பர்கள் குழு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நான்கு நண்பர்கள் இணைந்து கொரானா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக காக்கும் விதமாக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணிக்காபுரம் ஊராட்சியை சேர்ந்த உதயகுமார், ஸ்டாலின், கண்ணன் மற்றும் செல்வம் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். சமூக அக்கரை கொண்ட நால்வரும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு கொரானா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட தங்களது கிராம பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினர். இந்நிலையில் தற்போது கொரானா தாக்குதலின் இரண்டாம் அலை தாக்குதலினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும் இந்தாண்டு தமிழக அரசு கொரானா நிவாரண நிதியாக ரூபாய்.2000/- மற்றும் மளிகை பொருட்கள் வழங்க அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரானாவின் தாக்குதலினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் விதமாக மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 2500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க முகக்கவசம், கபசுர குடிநீர், அலோபதி மருந்து உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க திட்டமிட்டனர். இதனை அடுத்து அலோபதி மருத்துவரின் ஆலோசனை பெற்று கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு அலோபதி மருந்து மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வீடு வீடாக கொண்டு சென்று அளித்தனர். மேலும் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு கொரானாவினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனிடையே செய்தியாளர்களிடையே பேசிய நண்பர்கள் தங்களது கிராமத்தில் உள்ளவர்கள் கொரானா பிடியில் சிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுபோன்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாகவும், இதனை தொடர்ந்து பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இது போன்று விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர். நண்பர்கள் நான்கு பேர் இணைந்து பொதுமக்களுக்கு கொரானா தாடுப்பு நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக சென்று சமூக பணியாற்றி வருவது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.