ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு… தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 4 கொலை வழக்குகள் உள்பட 56 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி ஒருவன் போலீசாரால் சுடப்பட்டான்.
கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த மாணிக்கராஜா மீது கொலை, கொள்ளை என 56 வழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் போலிப் பட்டாசு ஆலை நடத்தியதாக போலீசாரிடம் பிடிபட்டவர் மாணிக்கராஜா. இந்த நிலையில் நாலாட்டின்புதூரை அடுத்த கார்த்திகைப் பட்டியில் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மாணிக்கராஜா பதுக்கிவைத்துள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கோவில்பட்டி துணை காவல் கோட்டத்துக்கு உட்பட்ட சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையில் காவலர்கள் அருண்குமார், செந்தில்குமார், செல்வகுமார், முகம்மது மைதீன் ஆகியோர் அடங்கிய குழு கார்த்திகைப்பட்டிக்கு விரைந்தது.
தோட்டத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மறைந்திருந்த மாணிக்கராஜா அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காவலர்கள் முகம்மது மைதீனுக்கும், செல்வகுமாருக்கும் காயம் ஏற்பட்டது. நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, தற்காப்புக்காக மாணிக்கராஜாவின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் காயமடைந்த மாணிக்கராஜா, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மாணிக்கராஜா தாக்கியதில் காயமடைந்த காவலர்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரண்டு மருத்துவமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீசிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடி வழுக்கி விழுந்தவர்களுக்கு மனித நேயத்துடன் மாவுகட்டுப்போடும் காவல்துறையினர், போலீசாரை தாக்கும் ரவுடிகளுக்கு துப்பாக்கியால் பதில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில், கோவில்பட்டியில் ஒரு ஜவுளிக் கடை வாசலில் நின்றிருந்த தன்னை பிடித்துச் சென்று கண்ணைக் கட்டி காலில் சுட்டதாக மாணிக்கராஜா ஊடங்களிடம் பேசிய காட்சி ஒன்று வெளியானது. இந்த சர்ச்சையில் தான் சிக்கியுள்ளார் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, ஊடகங்களுக்கு மாணிக்க ராஜா அளித்த பேட்டியில், குற்றம் செய்யாத நிலையில் தான் சுடப்பட்டதாகவும் போலீசார் வேண்டும் என்றே தன் மீது வழக்குகள் போடுவதாகவும் குமுறினார்.
மாணிக்கராஜாவை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர் இசக்கிராஜா 2018-ம் ஆண்டு இறுதியில் ரவுடிகளிடம் அவர் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் ஓட்டல் உரிமையாளரைத் தாக்கியதாக சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து கோவில்பட்டியில், ஒரு குடும்பத்தின் விவாகரத்து விவகாரத்தில் தலையிட்டார் என்றும் சர்ச்சையில் சிக்கினார். தற்போது குற்றத்தில் ஈடுபடாத ரவுடியை துப்பாக்கியால் சுட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் இசக்கிராஜா.
- நமது நிருபர்