தமிழகம்

அகழாய்வுப் பணிகள் தொடக்கம்..!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகையை தொடர்ந்து, மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்தபோது, இங்கு பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பல வகையான பொருள்கள் கண்டறியப்பட்டதுடன், பழமையான நகர நாகரிகம் இருந்தது தெரியவந்தது.

கீழடியைத் தொடர்ந்து, அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்பட வேண்டும், அப்போதுதான் தமிழர்கள் வாழ்ந்ததற்கான நகர நாகரிகம் முழுமையாகத் தெரியவரும் என கோரிக்கைகள் எழுந்தன. அதன்பேரில், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணியை தொடக்கி வைத்தார்.

மேலும், அகழாய்வுப் பணிகள் கொந்தகை, அகரம், மணலூருக்கும் விரிவுபடுத்தப்பட்டன. இதற்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.இதனிடையே, பொது முடக்கம் காரணமாக, கீழடியில் நடந்து வந்த 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த மார்ச் 24 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 56 நாட்கள் கழித்து கடந்த வாரம் இப்பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்கு, யோகலெட்சுமி என்பவரது 2 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு, அகழாய்வுக்கான குழிகள் தோண்டும் பணி, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது.. கொந்தகை அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. தற்போது, மணலூரில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், 2,500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இங்கு, செப்டம்பர் மாதம் வரை அகழாய்வுப் பணிகள் நடைபெறும்.

சிவகளை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு தொடக்கம்:

ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தையது தாமிரபரணி நாகரீகம். இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு நடந்த இடமும் ஆதிச்சநல்லூர் தான். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜகோர் 1876 ல் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் கொண்டு காட்சிபடுத்தினார். 1902 ல் அலெக்ஸாண்டனர் ரியா என்பவர் இங்கு ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை சென்னை அருங்காட் சியகத்தில் கொண்டு வைத்தார். அவரின் நீண்ட அறிக்கைத் தான் இன்றைக்கு ஆதிச்சநல்லூரை உலகமே ஊற்று நோக்க வைத்துள்ள இதற்கிடையில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் சார்பில் தியாக சத்தியமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. 2004ல் கிடைத்த முதுமக்கள் தாழியை அமெரிக்கா புளோரிடா ஆய்வகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பியது. அந்த முதுமக்கள் தாழி 2900 வருடங்களுக்கு முந்தையது என உறுதியானது. இதனால் ஆதிச்சநல்லூர், கீழடியை விட முந்தையது என நிருபணமானது. இதற்கிடையில் மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணிக்கரையில் உள்ள இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்று 31.01.2020 அன்று தொடங்கியது.

இதற்காக ஆதிச்சநல்லூரில் உள்ள புளியங்குளம் பாண்டிய ராஜா கோயில் அருகில் 50க்கு 50 மீட்டரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் சுத்தம் செய்தனர். பின்னர் அந்த இடத்தில் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் சுமார் 7 அடி ஆழம் பார்வையிட்டனர். இந்த குழுவில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், ஆதிச்சநல்லூர் கள பொறுப்பாளர் பாஸ்கரன் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
இதே போல் சிவகளையில் உள்ள பரம்பில் மூன்று இடத்தில் அகழாய்வுக்கு ஆயத்த பணி நடந்தது. இதற்காக தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் பூமிக்குள் உள்ள முதுமக்கள் தாழிகளை கண்டு பிடிக்கும் பணிநடந்தது. சிவகளை தொல்லியல் கள பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் தொல்லியல் துறையினர் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் மத்திய பட்ஜெட் கூட்டதொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அகழாய்வு பணிகள் துவங்க உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், 25-.5-.2020 அன்று அகழாய்வு பணிகள் துவங்கியது. இந்த அகழாய்வு பணியினை தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். ஆதிச்சநல்லூர் அகழாய்வு பகுதியைப் பொறுத்தவரை இந்த அகழாய்வு பணி 6ம் கட்ட அகழாய்வாகும். இதற்கு முன்னர் 1876, 1902, 1905, 2004, 2005 வருடத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த பணிகள் அனைத்தும் வெளிநாட்டினர் மற்றும் மத்திய தொல்லியல் துறை சார்பாக நடந்தது.

உலக நாகரீகத்தின் தொட்டில் தாமிரபரணி நாகரீகம் ஆதிச்சநல்லூர். 144 வருடங்களுககு முன்பே இந்தியாவில் முதன் முதலில் அகழாய்வு நடந்த இடம். ஆனால் இதுவரை முழுமையான அகழாய்வு அறிக்கை வெளிவரவில்லை. 1902ல் அலெக்ஸாண்டர் இரியா நடத்திய ஆய்வின் குறு அறிக்கையே தற்போது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 2004ல் நமது இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த அறிக்கையும் 16 வருடங்களை தாண்டி ஒரு பகுதியே வெளிவந்துள்ளது.

& கே.எஸ். இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button