டிக்டாக்கில் பொழுதைக் கழிக்கும் பெண் உதவி ஆய்வாளர்
மதுரையை சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், காவல் நிலையத்தில் அமர்ந்தபடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொழுதை கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மாவட்ட காவல்துறையில் பணி புரிந்து வரும் பெண் உதவி ஆய்வாளர் மீரா என்பவர் தான் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு சிக்கி தவிப்பவர். சவாலான காவல் பணிக்கு மத்தியில் மன அழுத்தத்தை போக்குவதற்காக டிக்டாக்கிற்குள் கண்களை கலந்துள்ளார் உதவி ஆய்வாளர் மீரா.
காவல்துறையில் ஆண்களை போல சிகை அலங்காரத்துடன் ஸ்டைலாக வலம் வந்த காவல் அதிகாரி மீராவின் நடிப்புத்திறமைக்கு டிக் டாக் சிவப்பு கம்பளம் விரித்தது. ஒரு கட்டத்தில் காவல் நிலையத்திற்குள் வைத்தே அவர் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் அளவிற்கு டிக்டாக்கிற்கு அடிமையானார்.
போலீஸ் சீருடையில் தலையில் தொப்பியை வைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குள் மீரா பதிவிட்ட வீடியோக்கள் புதிய சர்ச்சைகளை கிளப்பி விட்டது. இதற்கு பின்னரும் டிக்டாக்கில் இருந்து விடுபடாமல் மன அழுத்தத்தை குறைக்க மீரா, புதிய வீடியோக்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையே காவல் உதவி ஆய்வாளர் மீராவின் டிக்டாக் வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது.
காவல் நிலையம் முன்போ, காவல்துறை வாகனம் முன்போ நின்று கொண்டு டிக்டாக்கில் நடிப்பு திறமையை காட்டிய பலர் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொறுப்பான காவல் உதவி ஆய்வாளர் பணியில் உள்ள ஒருவர் எப்படி காவல் நிலையத்திற்குள் அமர்ந்து கொண்டு பொழுது போக்கிற்காக வீடியோ பதிவிடலாம் என்று கேள்வி எழுந்தது.
இந்த வீடியோக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காவல் பணியில் மன அழுத்தம் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான், அதே நேரத்தில் காவல் நிலையத்தில், கண்ணியமிக்க காவல் சீருடை அணிந்து கொண்டு பொழுது போக்கிற்காக நடிப்பது ஒரு போதும் ஏற்புடையது அல்ல என்று எச்சரித்துள்ளனர் காவல் உயர் அதிகாரிகள்..!