கதை திருட்டு வழக்குகளில் முன்னிலை வகிக்கும் முருகதாஸ்
சர்கார் சர்ச்சை ஓய்ந்து விட்டது. ஆனால் முருகதாஸ் என்ற இயக்குநரின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. கதை திருட்டு என்ற சர்ச்சை முருகதாஸிற்கு புதிது அல்ல. ஆனால் அது தற்போது தான் விஸ்வரூபமெடுத்துள்ளது.
சினிமா என்னும் கனவுலகில் நுழைய படையெடுக்கும் நபர்கள் தான் உருவாக்கிய கதைகளை பிறரிடம் தெரிவிக்க அதுவோ இன்னொரு இயக்குநரால் விரைவில் படமாக்கப்பட்டு விடுகிறது. கஜினி, ஏழாம் அறிவு, கத்தி என அவரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் கதை திருட்டு சர்சையும் கூடவே வந்து விடுகிறது.
தீனா படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கிய ரமணா படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. ஆனால் இரண்டாவது படத்திலேயே கதை திருட்டு விவகாரத்தில் சிக்கினார். ரமணா படத்தில் வரும் பிரபலமான மருத்துவமனை காட்சியை தன்னிடம் இருந்து முருகதாஸ் திருடிவிட்டதாக உதவி இயக்குநர் நந்தகுமார் கூறியது அந்நாளில் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
ரமணாவை தொடர்ந்து கஜினி படத்தை இயக்கிய முருகதாஸ் அப்படத்தில் Short Term Memory Loss உட்பட உடம்பில் பச்சை குத்தி கொள்வது, மொட்டை தலை கெட்டப் என பலவற்றையும் ஹாலிவுட் மொமெண்டோ படத்தில் இருந்து உருவியிருந்தார்.
பின்னர் இதே படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு இந்தியாவின் முதல் ரூ.100 கோடி வசூல் செய்த படம் எனும் மகத்தான சாதனையை படைத்தது. இதன் கதை கருவை கேள்விப்பட்ட ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் ‘மொமெண்டோ’ படத்தின் இயக்குனருமான கிறிஸ்டோபர் நோலன், தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் தன் படத்தை இந்தியில் எடுத்திருப்பது வருத்தமளிப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீஞ்சூர் கோபி என்பவர் முருகதாஸ் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ‘கத்தி’ கதை என்னுடையது என அவர் சொன்ன அடுத்த நொடி வைரலானது. இந்த விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று கோபிக்கு ஆதரவாக பெரிய பிரச்சாரம் சென்றது. குறிப்பாக மீஞ்சூர் கோபிக்கு யுடியூப் சானல்கள் அதிகமாக ஆதரவு கொடுத்தன.
இந்தக் குற்றச்சாட்டு, வார்த்தை சண்டையாக ஆரம்பித்து பிறகு வழக்கு வரை சென்றது. இறுதியில் அனல் பறக்கும் வழக்காக வரும் என எதிர்பார்த்த வேளையில் வழக்கை வாபஸ் பெற்றார் கோபி. அடுத்த நிமிடமே கோபியை வறுத்து எடுத்தனர் அதுவரை ஆதரவு அளித்து வந்த நெட்டீசன்கள். வழக்கு வாபஸ் ஆன பின் மீஞ்சூர் கோபி, கோபி நயினார் ஆனார். நயன்தாராவை வைத்து ‘அறம்’ எடுத்தார். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்தப் படம் நயன் சினிமா வாழ்க்கையில் ப்ளாக்பாஸ்டர் ஹிட் அடித்தது.
இதே கோபிதான் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ கதை என்னுடையது என சர்ச்சை கிளப்பினார். அந்தச் சர்ச்சையும் அனல் பறக்க அதுவும் அப்படியே அடங்கிப்போனது. முருகதாஸின் ‘கத்தி’ கதைக்கு தஞ்சை இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு மற்றும் ராஜசேகரும் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அவர்கள் எடுத்த ‘தாகபூமி’ கதையைதான் முருகதாஸ் திருடிவிட்டதாக அவர்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன் வைத்து முறையிடப்பட்டது. தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இதனை விசாரித்த நீதிபதி முகமதுஅலி, படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும், நடிகர் விஜய்யையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதன் பிறகு அந்தப் பிரச்னையும் அடங்கிபோனது.
விஜய்யின் ‘கத்தி’யை பொருத்தவரை முருகதாஸுக்கு ஏகப்பட்ட பிரச்னை இலங்கை ராஜபக்ஷேவை முன் வைத்து அது தமிழர்கள் ஸ்/s சிங்களர்கள் பிரச்னையாக கூர் தீட்டப்பட்டது. கடைசி வரை அமைதியாக இருந்த முருகதாஸ் படம் வெளியான பிறகு ஒரு பேட்டியை கொடுத்தார். அதில் ‘நான் மட்டும் என்ன நிலாவில் இருந்தா குதித்து வந்திருக்கிறேன். எனக்குப் பின்னாலும் ஒரு ஜாதி இருக்கிறது. அவர்கள் வர மாட்டார்களா? ஒரு கிரியேட்டராக வேலை செய்ய விடுங்கள். தமிழில் படம் பண்ணுவதற்கே வெறுப்பாக உள்ளது. பேசாமல் வேறு மொழிக்கு போய் படம் பண்ணலாமா என யோசிக்க தோன்றுகிறது” என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசியிருந்தார்.
அப்போதும் அவர் ‘கத்தி’ கதை திருட்டு பற்றி விரிவாக பேசவில்லை. அந்தப் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ‘கோபி என்பவரை நான் சந்தித்ததே இல்லை’ என மறுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருடங்களில் முருகதாஸை மூன்று முறை நேரில் சந்தித்து நான் கதையை கூறியிருக்கிறேன். என் ‘மூத்தக்குடி’ கதையை கேகே நகர் சிவன் பார்க்கில் வைத்து அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை கதையை சொன்னேன். குறைந்தது 10 முறையாவது கதையாக்கம் குறித்து முருகதாஸிடம் போனில் பேசி இருப்பேன்.” என்று மீஞ்சூர் கோபி விளக்கி இருந்தார். அத்தோடு ஜெகன் மூலமாகதான் என் கதை முருகதாஸ் கைக்கு போனது என்றும் விவரம் தந்திருந்தார். ஆனால் அந்தக் கதை திருட்டு பற்றி நடிகர் விஜய் இன்று வரை எந்தக் கருத்தையும் சொன்னதில்லை.
ஆனால் இந்த முறை முருகதாஸின் ‘சர்கார்’ கதை திருட்டை முன் வைத்திருப்பவர் இப்பிரச்னையில் விஜய்யையும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார். அவர் தந்திருக்கும் பேட்டியில் முதலில் விஜய்யை சந்தித்துக் கூறிய கதைதான் ‘செங்கோல்’. ஆனால் அரசியல் கதையில் நான் நடிக்கும் எண்ணத்தில் இல்லை என மறுத்துள்ளார் விஜய். இப்படிதான் நீளுகிறது ‘சர்கார்’ கதை திருட்டு. மேலும் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இவரது கதையை 2007லேயே அவர் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கும் வருண் கூறியுள்ளார். இந்தக் கதை விஜய் என்ற போட்டோகிராஃபர் மூலமாக முருகதாஸுக்கு சென்றதாக அவர் கூறியுள்ளார். இவர் கதையையும் முருகதாஸ் கதையையும் ஒப்பிட்டு பார்த்த சங்க தலைவர் பாக்யராஜ் இரண்டு கதைகளுமே ஒன்றுதான் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக வருண் கூறியுள்ளார்.
மேலும் 7-ம் அறிவு படத்தில் வரும் போதிதர்மன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் முருகதாஸிடம் தான் கூறியவை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கோபி நயினார் முன்வைத்தார். கத்தி, தாகபூமி குறும்படத்தின் கதை எனக்கூறி உதவி இயக்குநர் அன்பு ராஜசேகரும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். தமிழில் கவனம் ஈர்த்த ‘மௌனகுரு’ படத்தை இந்தியில் உரிமம் வாங்கி ரீமேக் செய்த முருகதாஸ் அண்மையில் ஸ்பைடர் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரமும் கிறிஸ்டோபர் நோலனின் ‘டார்க் நைட்’ படத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரத்தின் சாயலில் உருவாக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் முருக நோலன் என இணைய வாசிகளால் கேலிக்குள்ளாக்கப்பட்டார். தற்போது உச்சமாக, சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றத்தின் வாசல்படியை ஏறியிருக்கிறார் முருகதாஸ்.
இந்நிலையில், விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், படக்குழு வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்துகொள்வதாக தெரிவித்தது. படத்தின் துவக்கத்தில் நன்றி என்று குறிப்பிட்டு வருண் ராஜேந்திரன் பெயர் இடம்பெறும் எனவும், அவருக்கு ரூ.30 இலட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், கதை திருடப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. ஒருபக்கம் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனராக இருந்தாலும், இன்னொரு பக்கம் தொடர்ந்து இவர் படங்கள் கதை திருட்டு விவகாரத்தில் சிக்குவது வேடிக்கையான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.