அரசியல்

தேர்தல் பரப்புரை சுவாரசியங்கள்

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. இதனால் அதிமுக திமுக உள்ளிட்ட இதர கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். தேர்தல் பரப்புரையின் போது, வாக்குறுதிகள், அதிமுக- திமுக காரசார விவாதங்கள் அனைத்தையும் தாண்டி, சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகின்றன.

திருச்சியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் பேசிய பிரேமலதா, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அடிக்கடி பாடுவது ஒளிமயமான எதிர்காலம் என்ற எம்.ஜி.ஆர். பாட்டுதான் என மேடையில் தெரிவித்தார். இதில் உண்மை என்னன்னா அந்தப் பாடலுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொடர்பில்லை. அது சிவாஜி நடிப்பில் வெளிவந்த பச்சை விளக்கு படத்தில் இடம்பெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து அறிமுகக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மைக் பிடித்த ஒருவர், அதிமுக ஆட்சியில், கட்சியினருக்கு கூட எந்த அரசு பணியையும் வாங்க முடியவில்லை என பேசினார். அவரிடமிருந்து மைக்கை அதிமுக நிர்வாகிகள் போராடி வாங்கினர்.


தேர்தல் வந்தால்தான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் நினைப்பே வரும் என்று சொல்வதுண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் முதலமைச்சரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் டீக்கடையில் அமர்ந்து தேனீர் அருந்தினர்.
சிவகங்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக் கொண்டிருந்த போது, தொண்டர் ஒருவர் உற்சாக மிகுதியால் விசில் அடித்துக்கொண்டே இருந்தார். அவரை அமைதிப்படுத்துவது பெரும்பாடாகிப் போனது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் எழுச்சி பொங்க பேசிக் கொண்டிருந்த நிலையில், அதிமுக எம்.பி அன்வர் ராஜா தூங்கி வழிந்த சம்பவம் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பன் வாக்குசேகரித்தபோது, நடந்த தேர்தல் விதிமீறல்களும், செய்தியாளர்களின் கேமராவில் சிக்கிக் கொண்டது. காளியப்பன் உதவியாளர் என கூறப்படும் நபர், ஆரத்தி எடுக்க காத்திருந்த ஓவ்வொருவரின் தட்டுகளிலும் 20 ரூபாய் பணம் போட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுக்கூட்டம், பரப்புரை என வேட்பாளர்கள் பிசியாக இருக்க, தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள நூதன வழியை தேர்வு செய்துள்ளார் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன். செல்ஃபி வித் சுவெ என்ற நிகழ்ச்சி மூலம், தம்முடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காகவே நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் அவர்.
கன்னிவாடி மந்தை திடலில் வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசும்போது, ‘’இப்படை தோற்கின் எப்படை வெல்லும். நமது கூட்டணி வேட்பாளர் ஜோதிமுத்துவுக்காக ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.
உடனே பின்னால் இருந்த அமைச்சரின் உதவியாளரும், கூட்டத்தில் இருந்தவர்களும் மாம்பழம் சின்னம் எனக் கோஷமிட சிரித்துக் கொண்டே தலையில் லேசாக தட்டிக் கொண்டு மாம்பழச் சின்னம் எனக் கூறினார். இதனால் லேசான சிரிப்பலை எழுந்தது.
ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் வேட்பாளர் டி.ஆர் பாலுவை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது. அதில் பேசிய அவர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தம்மை புகழும்போது, மிகுந்த பயமாக இருப்பதாக நகைச்சுவையுடன் கூறியதை ரசிக்கும் விதமாய் அமைந்தது.
இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, மதுரையில் நடந்த நடன நிகழ்ச்சி தான் ஹைலைட். மதுரை காமராஜர் நகரில் தமிழக வாழ் வடமாநிலத்தவர்கள் பகுதிக்குச் சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வாக்குசேகரிப்பின்போது இளைஞர்களுடன் தாண்டியா நடனமாடி மகிழ்ந்தார்.
விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ’புதிய தமிழகம் கட்சி’யின் புதிய அலுவலக கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
திறப்பு விழாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மிஷன் சக்தி விண்வெளி திட்டம் குறித்து பிரதமர் மோடியின் உரை பற்றியும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தியாவை பாதுகாக்கும் ஸ்டெண்ட் மாஸ்டர் தான் மோடி எனவும், நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே மல்லுக்கட்டி தடுக்கக்கூடிய மனிதர் என்று பேசினார்.
அதை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு பொது சின்னம் ஒதுக்கப்படுவது தொடர்பான கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், டிவி தினகரனுக்கு பொது சின்னம் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் குடும்பத்தினரே அவரை மதிக்க மாட்டார்கள் என கூறினார்.

பாஜக-விடம் அதிமுக அடகு வைக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி, அதிமுக-வை யாரிடமும் அடகு வைக்கவில்லை. கட்சியை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் பாதுகாவலராக பிரதமர் மோடி இருப்பது போல தமிழகத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் நிறுவனர் ராமதாஸ், அதிமுக வேட்பாளார் செஞ்சி சேவல் ஏழுமலை என்பவரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் களமிறங்கினார்.
அப்போது பேசிய அவர், ‘எந்தக் காரணத்திற்கும் திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறினார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில் அவர் பேச நினைத்தது, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீங்க’ என்றுதான். ஆனால் தவறுதலாக திமுக அதிமுகவுக்கு என்று கூறிவிட்டார். இதுபோன்ற பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள், தேர்தல் பரப்புரைகளின் போது நிகழ்ந்தன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button