வெறுப்பு பேச்சு! அவதூறு வழக்கு… தமிழக அரசிடம் உதவி கேட்கும் அண்ணாமலை..!
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், கடந்த 2022ல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் காவல் ஆணையரிடம் ஒரு புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், 2022ல் தீபாவளியின்போது அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதில்,
இந்து கலாசாரத்தை அழிப்பதற்காக, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்துவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன’ என்று கூறியிருந்தார். இதை ஆராய்ந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் அவ்வாறு வழக்கு போட்டது அர்ஜுன் கோபால் என்றும், அவர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.
அண்ணாமலை வேண்டும் என்றே இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான தகவலைப் பரப்பியிருக்கிறார். எனவே, அவர்மீதும், அந்த வீடியோவை ஒளிபரப்பிய சேனல் நிர்வாகி மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் (IPC) 153, 505 (3), 120 ஏ, சி. ஆர்.பி.சி பிரிவு 156 (3), 200 ஆகியவற்றின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று பியூஸ் மானுஷ் தெரிவித்திருந்தார்.
ஆனால், காவல்துறை விசாரிக்க மறுக்கவே, நேராக சேலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு IPC 153, 505-க்கு கீழ் வருவதால் அரசிடமிருந்து விசாரணை அனுமதி பெறவேண்டும் என்று கூறவே, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினார் பியூஷ் மானுஷ்.
இறுதியில், வழக்கை விசாரிக்கலாம் என தமிழக அரசும் அனுமதி வழங்கியது. அதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. பின்னர், இந்த வழக்கை ரத்துசெய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத்தாக்கல் செய்தபோதிலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்த அண்ணாமலை, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
கடந்த ஏப்ரலில் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அண்ணாமலை மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கூடவே, புகார்தாரர் பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசை இதில் ஒரு தரப்பாகச் சேர்க்க வேண்டும் என அண்ணாமலை தரப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.
அண்ணாமலையின் இத்தகைய நகர்வு குறித்து பேசிய பியூஸ் மானுஷ் கூறுகையில், `அண்ணாமலை இந்த வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உத்தியாக,
நீங்களும் இந்த வழக்கில் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்று தமிழக அரசிடம் தற்போது உதவி கேட்டிருக்கிறார். எங்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துவிட்டது. நோட்டீஸ் வந்தபிறகு தமிழக அரசு கவுன்சில் அமைத்து, பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த பதில் மனுவை நாங்கள் ஆதரிக்கவும் செய்யலாம், எதிர்க்கவும் செய்யலாம். தமிழக அரசு இதில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். முடிவு தமிழக அரசின் கையில்தான் இருக்கிறது. மறுபக்கம், சேலம் காவல்துறை முதலில் இந்தப் புகாரை எடுக்காததால், அவர்கள் தன்னை காப்பாற்ற வருவார்கள் என்று அண்ணாமலை நினைக்கிறார். IPC பிரிவு 153-ன்படி யார் மீது யார் வழக்கு போட்டாலும், விசாரணை அனுமதி வாங்க வேண்டும் என்று அந்த பிரிவு கூறுகிறது.
அப்படியிருக்க, ஐ.பி.எஸ் அதிகாரியாக இரண்டு லட்சம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பதாகக் கூறும் அண்ணாமலைக்கு இதுகூட தெரியாதா… இதற்கெல்லாம் தி.மு.க அரசு அனுமதி கொடுக்கிறது என்று கூறிவிட்டு, இன்று அதே தி.மு.க அரசிடம் `என்னைக் காப்பாற்ற வாருங்கள்’ என்கிறார். மொத்தத்தில் அவர் பயந்துவிட்டார். இவர்களைப் பொறுத்தவரைக்கும், வெறுப்பு பேச்சு மற்றும் பொய்யான தகவலைப் பரப்பி இந்து சமூகத்தை அச்சுறுத்தி கலவரத்தை உண்டுபண்ணுவார்கள்.
அதற்காக, இப்படி இஷ்டத்துக்குப் பேசுவார்கள். இல்லையென்றால், எதற்காகத் தீபாவளிக்கு ஒருநாள் முன்பு எதற்கு இப்படி பொய் பரப்பவேண்டும். இப்போது, மாட்டிக்கொண்டோம் என்று தெரிவதால் தமிழக அரசிடம் உதவி கேட்கிறார். தி.மு.க அரசு என்ன முடிவெடுக்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.