கொள்ளிடம் ஆற்று ரயில்வே பாலத்தின் கீழ் தொடரும் மணல் கொள்ளை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடக்கும் மணல் திருட்டை உடனடியாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவபெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் மணல்குவாரியில் ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்து மணல் அள்ளிச் செல்வதாக மக்கள் கூறுகின்றனர். வண்டி கடந்து வரும் தூரத்தைப் பொறுத்து மணலின் விற்பனைத் தொகை மாறுபடும். ஆனால் இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று எண்ணும் சில மாட்டுவண்டிக்காரர்கள், உத்தமர்கோயில் கொள்ளிடம் ஆற்று ரயில்வே பாலம் அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
நாள்தோறும் இந்த சட்டவிரோத மணல் திருட்டு அதிகரித்துக்கொண்டே செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தன. அதையடுத்து, காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. இதனால் காவிரி ஆற்றில் அளவுக்கதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பொதுப்பணித் துறை மூலம், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர், முறையே பிரித்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடர்ச்சியாக விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வரை திறந்துவிடப்பட்டதால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திருச்சி திருவளர்ச்சோலை, உத்தமர்சீலி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மிதந்தன. சிதம்பரம், அரியலூர் திருமானூர் பகுதிகளில் உள்ள பல கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் கடந்த ஆகஸ்ட் 18-ம்தேதி திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்த 90 வருட பழைமையான இரும்பு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதுநடந்த சில தினங்களிலேயே கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இரவு முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தகவலறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்த இரண்டாம் நாளே நேரடியாக முக்கொம்புக்கே வந்து ஆய்வு நடத்தினார். மேலும் சீரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்திய அவர், முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பகுதியில் 410 கோடி செலவில் புதிய அணைக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொள்ளிடம் பழைய பாலத்தின் அருகில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், கடந்த 2016-ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி மதிப்பில், கட்டி முடிக்கப்பட்ட சென்னை நேப்பியர் பாலம் வடிவமைப்பைப் போன்று புதிய பாலம் மட்டுமே தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் புதிய பாலத்தில் உள்ள 24 தூண்களில், 17 முதல் 23 வரையிலான 7 தூண்கள் வெள்ளத்தில் மண்ணரிப்பு காரணமாக, அஸ்திவாரம் வெளியே தெரியும் அளவுக்குப் பிடிமானம் இல்லாமல் காட்சியளிக்கிறது. தரைப்பகுதியிலிருந்து சுமார் 15 அடி உயரம் வரை மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது, பருவ மழை இன்னும் சில நாள்களில் தமிழகத்தில் தொடங்க உள்ளதால், பருவமழை தீவிரம் அடைந்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் அரிப்பின் காரணமாக புதிய பாலத்துக்கும் ஆபத்து ஏற்படலாம் எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதேபோல் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் உயரழுத்த மின்கோபுரங்களின் பில்லர்கள், காவிரி கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்காக நவீன ஆழ்குழாய் குடிநீர் பை பில்லர்கள் உள்ளிட்டவையும் தளத்தில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, அதன் அடிப்பகுதியில் மண்ணில் இருந்து வெளியே காட்சியளிக்கின்றன.
அதற்கு சட்டவிரோதமாக மணல் திருடப்படுவதே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் தற்போது நடக்கும் இந்த மணல் திருட்டை தடுக்காவிட்டால் புதிய பாலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.