சட்டமன்ற தேர்தல் 2021 : அமைச்சர்கள் படுதோல்வி ஏன்..?
அதிமுக அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்களில் 11 பேர் இந்த தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்கள். பணம், அதிகாரம், ஆணவப் பேச்சு இவற்றையெல்லாம் மக்கள் ஓரங்கட்டி விட்டார்கள் என்றே தெரிய வருகிறது. அமைச்சர்களின் தோல்வியை சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அதிமுகவினரே கொண்டாடுகிறார்கள். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைச்சர்கள் பெரும்பாலானோர் தங்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதும் தான்தோன்றித்தனமாக செயல்படுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது இராஜேந்திர பாலாஜி கடந்த பத்தாண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் வலம் வந்தார். இரண்டு முறை சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்ற அவர் இந்தமுறை இராஜபாளையத்தில் போட்டியிட்டார். இதற்கு சிவகாசி எனது சொந்த தொகுதி, ராஜபாளையம் சொந்தக்காரர்கள் தொகுதி என பிறந்த வீடு, புகுந்த வீடு மாதிரி விளக்கமும் கொடுத்தார். இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக பணமாகவும், பொருளாகவும், நன்கொடையாகவும், செலவு செய்தும் இவரது கடந்த கால அடாவடி பேச்சாலும் முக்குலத்தோர் வாக்குகள் பிரிந்தாலும் தோல்வியடைந்தார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் சிவி சண்முகம். அவரது அண்ணன் ராதாவின் தலையீடு கட்சிக்குள் அதிகம் இருந்தது. கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் ஒருமையில் பேசுவதே இவரது வழக்கம். கடந்த ஐந்தாண்டுகளாக மணல் குவாரிகளுக்கு தமிழகம் முழுவதும் அனுமதி வழங்குவதும் பணம் வசூல் செய்வதுமே இவரது வேலை. பணம் சம்பாதித்ததும் கட்சித் தொண்டர்களை மதிப்பதில்லை. சிவி சண்முகம் வன்னியர்கள் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே அலைந்தார். பட்டியல் சமூக வாக்குகளை கவர மறந்துவிட்டார். சிறுபான்மையினர் வாக்குகளும் இவருக்கு வரவில்லை. இவரது உளரல் பேச்சுக்களும் இவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் வெற்றி பெறுவார் என்றே கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளிவந்தது. மீனவர்களின் படகுகளில் சீன எஞ்சின் பொறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மீனவ சமுதாயத்தின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். குத்துச் சண்டை, கிரிக்கெட், கபடி, மேடைகளில் பாடுதல், வேலை கேட்டு வந்த பெண்ணின் தாயாரிடம் போனில் பேசிய ஆடியோ போன்ற செயல்களால் மீடியா வெளிச்சம் தன் மீது இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தாரே தவிர தொகுதி மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ராயபுரம் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா? என்று சவால்விட்டார். இதற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினும் ஜெயகுமாரை வீழ்த்த நான் எதற்கு சாதாரண திமுக தொண்டரை நிறுத்தி ஜெயக்குமாரை தோற்கடிப்பேன் என்று பதிலுக்கு சவால் விட்டார். இறுதியில் திமுக வென்றது. ஜெயக்குமார் தனது ஆணவத்தாலும் கோமாளித்தனமான பேச்சாலும் தோல்வியடைந்தார்.
மதுரவாயல் தொகுதியில் பெஞ்சமின் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே கவுன்சிலர், துணைமேயர், அதிமுக மாவட்டச் செயலாளர் என படிப்படியாக வளர்ந்து, அமைச்சர் ஆனதும் கட்சியின் நிர்வாகிகளை அரவணைத்துச் செல்ல தவறிவிட்டார். இவரது ஆட்களின் அடாவடித்தனத்தால் சொந்த கட்சிக்காரர்களே இவருக்கு வேலை செய்யவில்லை. சிறுபான்மையினர் வாக்குகளும் இவருக்கு விழவில்லை. இதனால் தோல்வியடைந்தார்.
ஜோலார் பேட்டையில் போட்டியிட்ட அமைச்சர் வீரமணி கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் இவரது வன்னியர் சமூகம் தான் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது.
அமமுக சார்பில் இவரது மருமகன் இவரை எதிர்த்து போட்டியிட்டு வாக்குகளை பிரித்தார். கட்சி நிர்வாகிகளை ஒருமையில் திட்டுவதும் கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளினாலும் இவருக்கு வாக்களிக்காமல் திமுகவிற்கு மக்கள் வாக்களித்ததால் வீரமணி தோல்வியடைந்தார்.
இதேபோல் வெல்லமண்டி நடராஜன், பாண்டியராஜன், சரோஜா, எம்சி சம்பத், எம்ஆர் விஜயபாஸ்கர், ராஜலெட்சுமி போன்ற அமைச்சர்களும் இந்த தேர்தலில் தோல்வியடைந்தனர்.
– முகமது ஆரிப்