நாடகங்களை நிறுத்துங்கள்! : மோடியை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜ்

கும்பமேளாவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை பிரதமர் மோடி கழுவிவிட்டார். நாட்டின் மிக உயர்ந்த தலைவரே, தேர்தல் காலத்து நாடகங்களை நிறுத்துங்கள் என்று பிரதமர் மோடியை பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
ஏழை விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரப் பிரதேசத்தில் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, பிரயாக்ராஜ் (அலகாபாத்)க்குச் சென்று கும்பமேளாவில் புனித நீராடி வழிபாடு செய்தார். அதன்பிறகு, கும்பமேளாவில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை பிரதமர் மோடி கழுவிவிட்டார்.
அவருடைய செயலுக்கு சமூக வலைதளங்களில் ஒருபுறம் பாராட்டுகள் வந்தாலும், மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துவரும் பிரகாஷ்ராஜ், இந்தச் செயலையும் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்த பிரகாஷ்ராஜின் ட்விட்டர் பதிவில், ’அன்புக்குரிய நாட்டின் உயர்ந்த தலைவரே, இந்தத் தேர்தல் நாடகங்களை நிறுத்துங்கள். உண்மையில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தேவையானது, மரியாதை, பணி பாதுகாப்பு, அவர்களது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம், பாதுகாப்பு உபகரணங்கள்தான். உங்களது நாடகம் தேவையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலநிலை குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
கட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். மேலும் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவையும் , மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன் என தெரிவித்தார்..