அரசியல்

அதிமுகவிற்கு தோல்வி..பழனிச்சாமிக்கு வெற்றி..! – மாவட்டச் செயலாளர் (அதிமுக) வர்த்தக அணி

அதிமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பாஜகவுடன் கூட்டணி, சசிகலா தினகரனை சேர்க்காதது போன்ற பல்வேறு காரணங்கள் அதிமுகவினர் மத்தியிலேயே பேசப்பட்டு வந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதோடு அதிமுகவிற்கு தற்போது கிடைத்திருக்கும் வெற்றிக்கு முதல்வர் பழனிச்சாமி தான் காரணம் என்று அதிமுகவினர் பெருமிதப்படுகிறார்கள்.

இதுகுறித்து இராமநாதபுரம் அதிமுக வர்த்தக அணியின் மாவட்டச் செயலாளர் உதுமான் அலி நமது செய்தியாளரிடம் கூறுகையில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலினுக்கும் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை இந்த இதழின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் வாழ்விலும், தனி மனித வாழ்க்கையிலும் வெற்றி தோல்வி என்பது யாருக்கும் நிரந்தரம் அல்ல. மாறிமாறித்தான் வரும். இந்த தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அதனை சரி செய்து வரும் காலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதவாத கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டு அடிமையாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர்.

சிஐஏ முத்தலாக் தடைச்சட்டம் போன்ற பிரச்சனைகளில் முதல்வராக இருந்த பழனிச்சாமி தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். ஆனாலும் எதிர்கட்சிகளின் தொடர் பிரச்சாரத்தினால் மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக் கொடுப்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய புதிய யுக்தியை பயன்படுத்துவது போல் திமுக தலைவர் ஸ்டாலினை முன்னிருத்தி வியூகங்களை வகுத்து தேர்தலைச் சந்தித்தார்கள். அதுபோன்ற தேர்தல் வியூகங்களை வகுக்க அதிமுக தவறிவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணி பலமான கூட்டணியாக அமைந்தது.

எங்களது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளை வெளியே விடாமல் அவர்களையும் இணைத்து தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் இன்னும் சில கூடுதலான இடங்கள் அதிமுகவிற்கு கிடைத்திருக்குமோ என தோன்றுகிறது. இந்த தேர்தலில் இரண்டு கூட்டணிக்கும் வாக்கு சதவீதம் மூன்று சதவீதம் தான் வித்தியாசம். முதல்வராக இருந்த பழனிச்சாமி மீது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணியில் இருந்தவர்கள் ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியவில்லை. அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததைத்தான் குற்றம் சாட்டினார்கள்.

நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம், நெடுவாசல் போராட்டம், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் இதையெல்லாம் திமுக தங்களுக்குச் சாதகமாக சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் மக்கள் சற்று ஆராய்ந்து செயல்பட்டிருக்கலாம். சிஐஏ விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்துவிட்டு தேர்தல் அறிக்கையில் திரும்பப் பெறுவோம் என்று கூறியதையும் மக்கள் நம்ப மறுத்துவிட்டார்கள். முத்தலாக் தடைச்சட்டத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதிமுகவின் நிலைப்பாடு மாறிமாறி இருந்ததையும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விஷயத்தில் சற்று ஆராய்ந்து செயல்பட்டிருக்கலாம். இதனால் தென்மாவட்டங்களில் மிகப்பெரும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறோம். பெரும்பான்மையான இடங்களை அதிமுக இழந்ததற்கு இடஒதுக்கீடு பிரச்சனையும் ஒரு காரணம். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பல குழப்பங்கள் ஏற்பட்டது. கட்சி இரண்டாக பிளவுபட்டு மீண்டும் இணைந்து கட்சியையும் சின்னத்தையும் மீட்டு, சசிகலா, தினகரன், எதிர்ப்புகளையும் தாண்டி இந்த அளவிற்கு ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த பழனிச்சாமி தலைமையில் கிடைத்த வெற்றி மிகப்பெரும் வெற்றியாகவே கருதுகிறோம்.

ஆட்சி என்பது நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும். ஆளும் கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு எதிர்கட்சி ஒத்துழைப்புத் தரும். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக மக்களுக்கு பணியாற்றுவோம் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலினும் அதிமுகவை எதிரிக்கட்சியாக பார்க்காமல் எதிர்கட்சியாக பார்க்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றார்.

வெ.சங்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button