காவல்துறையினருக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மருத்துவர்கள், காவல்துறையினருக்கிடையே வாக்குவாதம் வேலை நிறுத்தப் போராட்டம் என பரபரப்பானது பரமக்குடி.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப்பணியில் இருக்கும் மருத்துவர்களும் காவல்துறை அதிகாரியும் தங்களுக்குள் யார் பெரியவர் என்கிற ரீதியில் இருதரப்பை சார்ந்தவர்களும் பொது வெளியில் விமர்சனம் செய்வதை தவிர்த்து கொரோனா இரண்டாம் அலையினால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மருத்துவர்களும், காவல்துறையும் இணைந்து செயல்பட்டு பொதுமக்களை கொரோனாவில் இருந்து காக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.
இதுசம்பந்தமாக மருத்துவர்கள் தரப்பில் விசாரித்த போது பரமக்குடி அரசு கலைக்கல்லூரி கொரோனா தடுப்பு சிறப்பு வார்டில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தங்கும் இடவசதியோ, உணவு ஏற்பாடுகளோ செய்யப்படாத நிலையில் அருகில் உள்ள கடைக்குச் சென்று பேஸ்ட் வாங்கி வருவதற்கு தங்களது இரண்டு சக்கர வாகனங்களில் சென்றதாகவும் அப்போது அந்த வழியில் ரோந்துப் பணியில் இருந்த பரமக்குடி துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன் மருத்துவர்கள் இருவரையும் அழைத்து விசாரணை செய்த போது நாங்கள் மருத்துவர்கள் என்று கூறியும் டிஎஸ்பி வேல்முருகன் இருவரையும் நம்ப மறுத்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியதால் இருவரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி சில மணி நேரத்திற்குப் பிறகு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். பிறகு மருத்துவர்கள் இருவர் மீதும் எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார் டிஎஸ்பி வேல்முருகன். மருத்துவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து கொரோனா காலத்தில் குடும்பங்களை மறந்து இரவு பகலாக மருத்துவ மனையிலேயே தங்கி பணி செய்து வருகிறார்கள்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் மருத்துவர்கள் என்று தெரிந்தும் அவர்களை மிரட்டி மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். மருத்துவர்களுக்கு எதற்கு 150சிசி இருசக்கர வாகனம்? மருத்துவர்கள் என்றால் பெரிய ஆளா? என்றும் திட்டியிருக்கிறார். இதனால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளுக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் ஒன்றையும் நடத்தியிருக்கிறார்கள்.
காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, இரவு நேரத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் ரோந்துப் பணியில், இருந்த துணை கண்காணிப்பாளர் இந்த நேரத்தில் சாலையில் இருவரும் என்ன செல்கிறீர்கள் என்று விசாரித்து அருகில் சென்று பார்த்த போது இருவரும் மது அருந்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள். டிஎஸ்பியிடம் நாங்கள் மருத்துவர்கள். எங்களையே மிரட்டுகிறீர்களா என்று போதையில் பேசியிருக்கிறார்கள். உடனடியாக போதையாக இருந்த இருவரையும் வாகனத்தில் காவல்நிலையம் அழைத்து வந்து மதுபோதை தெளிந்ததும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்கிறார்கள்.
மருத்துவர்களும் காவல்துறையினரும் இரவு பகலாக கொரோனா காலத்திலும் தங்களது பணிகளை செவ்வனே செய்து வருவது அனைவரும் அறிந்ததே. கொரோனா பெருந்தொற்று முதல் அலையில் மக்கள் அனைவரும் நிம்மதியாக வீட்டில் இருந்த போது காவல்துறையும், மருத்துவத்துறையும் தான் சிறப்பாக பணிபுரிந்தனர் என்று அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றனர். இப்படிப்பட்ட மருத்துவர்கள் ஊரடங்கு காலத்தில் சாலையில் நின்று மது அருந்தியிருக்க கூடாதுதான். காவல்துறையும் சற்று பொறுமையாக கையாண்டிருக்க வேண்டும். மருத்துவர்கள் போராட்டத்ததால் பாதிக்கப்பட்டது அப்பாவி ஜனங்கள்தான்.
வரும் காலங்களில் காவல்துறை அதிகாரிகளும், மருத்துவத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
– வெ.சங்கர்.