“நீங்கள் ஏன் பாஜக-வில் இணையக்கூடாது எனக் கேட்டிருக்கின்றனர்…” : செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். அப்போது அவர், “செந்தில் பாலாஜிமீது கூறப்பட்டிருக்கும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தையது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருக்கிறார். சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்திருந்தால், வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்… வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டிருக்கிறது.
மேலும், சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்தச் சாட்சியும் கூறவில்லை. வேலைக்காகப் பணம் கொடுத்ததாகக் கூறும் யாரும், நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் எனக் கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் இருவரிடம்தான் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் சாட்சியாகக்கூட சேர்க்கப்படவில்லை. செந்தில் பாலாஜிமீது கோபி, பிரபு ஆகிய இருவர் புகாரளித்தனர்.
அவர்களில் ஒருவர் சாட்சியாகச் சேர்க்கப்படவில்லை. மற்றொருவர், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்ற யாரையும் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கக்கூட இல்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜிமீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. `நீங்கள் ஏன் பா.ஜ.க-வில் இணையக் கூடாது?’ என விசாரணையின்போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டிருக்கிறது” என்றார்.
இதை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது அப்பட்டமான பொய். அவ்வாறு எந்த சமயத்திலும் யாரும் கேட்கவில்லை. செந்தில் பாலாஜி அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பிணை வேண்டும் என்பதற்காக, வேறு வலுவான வாதங்கள் இல்லாததனால், இந்தப் பொய்யை செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் தற்போது முன்னெடுக்கிறார்கள்” எனக் கூறி மறுத்தார்.
இதையடுத்து தன் வாதங்களைத் தொடர்ந்த கபில் சிபல், “ஒருவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும். வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத்துறையிடம் இருக்கும் நிலையில், எங்களால் சாட்சிகளைக் கலைக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக தாம் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி எங்கும் தப்பிச் செல்ல இயலாது. செந்தில் பாலாஜிக்குத் தற்போது இருக்கும் உடல்நிலைப்படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது.
எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்வார். 3000, 20000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டிருப்பதால் கலைக்க முடியாது” என்றார்.
செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “செந்தில் பாலாஜிமீது கூறப்படும் முறைகேடு, அவர் அ.தி.மு.க-வில் இருந்தபோது நடைபெற்றது. ஆனால், அவர் தி.மு.க-வில் சேர்ந்த பிறகே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட எலெக்ட்ரானிக் பொருள்களை ஆறு நாள்கள் சட்டவிரோதமாக அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா, இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி எங்கும் தப்பித்துச் செல்ல மாட்டார். வேண்டுமென்றால், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதால்தான் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்திருக்கிறது. இந்த முறைகேடு இடைத்தரகர்கள் மூலம் நடந்திருக்கிறது. பணம் கொடுத்த சிலருக்கு வேலை கிடைத்திருக்கிறது. சிலருக்கு வேலை கிடைக்கவில்லை. `வருமான வரிக் கணக்கை, வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலேயே அது சட்டபூர்வமான பணம் ஆகாது’ என்ற தீர்ப்புகள் இருக்கின்றன. வருமான வரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்பதை ஏற்க முடியாது. விசாரணையில்தான் அது தெரியவரும். குற்றச்சாட்டுக்குள்ளான நபர்தான், தன்மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி, தாம் தவறு செய்யவில்லை என நிரூபிக்க வேண்டும்.
`வேலை வேண்டும்’ எனக் கோரி பணம் கொடுப்பவர்கள், வங்கி மூலம் பணம் கொடுக்க மாட்டார்கள். அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், ஜாமீன் வேண்டும் எனக் கோர முடியாது. மிறிசி வழக்குகளுக்கு வேண்டுமானால் அது பொருந்தும். அமலாக்கத்துறையின் றிவிலிகி சட்டம் வேறு. அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக இருக்கிறார். சமூகத்தில் சக்திவாய்ந்த நபராக இருக்கிறார். எனவே, அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பிருக்கிறது. ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் கோருவதற்கு உடல்நிலை ஒரு காரணம் அல்ல. அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாகச் சிறையில் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜியின் எலெக்ட்ரானிக் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறுவது தவறு. ஆவணங்களைச் சேகரிக்கும் நோக்கிலேயே எலெக்ட்ரானிக் பொருள்கள் அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்டன. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வருகிற 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.