அரசியல்

சோதனைகளை கடந்து சாதித்த ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி சந்திக்காத சோதனைகளை ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சியினர் ஒருவர் கூட இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றாலும் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த மூன்று கட்சியினரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது தான் தாக்குதல் நடத்தினார்கள். இவர்களின் குரல்களுக்கெல்லாம் தலைமைக் குரலாக இந்தியப் பிரதமர் மோடியின் குரல் திமுகவுக்கு எதிராக கடுமையாக ஒலித்தது. இந்த மூன்று கட்சியினர் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை பிரித்ததால் தான் திமுக வெற்றி பெற்றது என்று பேசப்பட்டாலும் இந்த மூன்று கட்சியினரும் வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் திமுகவுக்கு இன்னும் கூடுதலான இடங்கள் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.

இந்த தேர்தலில் பெரியார் சந்திக்காத சவால், அறிஞர் அண்ணாவுக்கு வராத அறைகூவல், கலைஞர் கருணாநிதி சந்திக்காத சோதனைகளை ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். பெரியாருக்கு பார்ப்பனியம் மட்டும்தான் எதிரியாக இருந்தது. அறிஞர் அண்ணாவிற்கு காங்கிரஸ் மட்டும் தான் எதிரியாக இருந்தது. கலைஞர் கருணாநிதிக்கு அரசியல் ரீதியாக எம்ஜிஆர் மட்டும்தான் எதிரியாக இருந்தார்.

ஆனால் ஸ்டாலினுக்கு மதவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியினர், தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவினரும் மத்திய மாநில அதிகாரங்களை பயன்படுத்தி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு திமுக மீது பல முனை தாக்குதல் தொடுத்தார்கள்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் முதல்வர்கள் மத்திய அமைச்சர்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பாரதிய ஜனதா தலைவர்கள் திமுகவினர் இந்த தேர்தலில் வெற்றி பெற கூடாது என்கிற குறிக்கோளுடன் பிரச்சாரம் செய்தனர். அதிமுக அமைச்சர்களும் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகள் கேட்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மத்திய அரசின் கைப்பாவையாகவே மாநில அரசும் செயல்பட்டது.

மத்திய மாநில அரசுகளின் நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியினர் ஆகிய மூன்று கட்சிகளின் குறிக்கோளும் திமுகவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பது மட்டுமே. ஆனால் இவ்வளவு எதிர்ப்புகளையும் வீழ்த்தி விட்டுத்தான் இன்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்த தேர்தலில் முதல்வராக இருந்த பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் அரசியல் வியூகங்களை வகுக்கத் தவறியதாக அதிமுகவினர் புலம்புகிறார்கள். பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் அவர்களுக்கென தனியாக வாக்கு வங்கி இல்லை. பாரதிய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணமே அதிமுக வாக்குகள் தான். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதி காலங்காலமாக அதிமுக வெற்றி பெற்ற தொகுதி. அந்த தொகுதியை பாஜகவுக்கு தாரை வார்த்ததால் அதிமுகவினரும் அதிருப்தியில் உள்ளனர்.

எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பழனிச்சாமி அதிமுகவில் ஒரு வலிமையான தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

பழனிச்சாமி தலைமையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தென்மாவட்டங்கள் டெல்டா, மத்திய மாவட்டங்களில் திமுகவினரே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றால் கொங்கு மண்டலத்திற்கான கட்சியாகவே திகழ்கிறது. அதிமுகவின் வீழ்ச்சிக்கும் தற்போது கிடைத்திருக்கும் வெற்றிக்கும் எடப்பாடியே காரணம் என்கிறார்கள். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி தேர்தலைச் சந்தித்த பழனிச்சாமிக்கு தென்மாவட்டங்களில் யாரும் வாக்களிக்கவில்லை. அவசர அவசரமாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கியதால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் பழனிச்சாமி. தற்போது அதிமுகவின் ஆளுமை தான் மட்டும்தான் என நிரூபிக்கும் வகையில் எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அவரே வைத்துக் கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. இனி சசிகலாவும் அதிமுகவை கைப்பற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தினகரனை நம்பி நான்கு ஆண்டுகளாக கட்சிக்காக செலவு செய்த நிர்வாகிகளின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது. தேமுதிகவை பொருத்தவரை இனி ஜொலிப்பது என்பது மிகப்பெரும் சவாலாகவே இருக்கும்.

திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளைத் தவிர மற்ற கட்சியினர் யாரும் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி கட்சியினரும், தேனியில் அதிமுக மட்டும் தான் வெற்றி பெற்றது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிகள் அனைத்தும் ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

ராபர்ட் ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button